நாம் தமிழர் தம்பிக்கு அடிச்ச "ஜாக்பாட்"..! கடுப்பில் ஒரிஜினல் கட்சிக்காரர்கள்..!
திமுக மாணவரணி மாநில செயலாளராக, மாணவரணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவரணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தி தற்போது அந்த அமைப்பின் உயர்ந்த பதவியான மாணவர் அணி மாநில செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் ஏற்கனவே இருந்து வந்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் தற்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார்.
புதிதாக திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவராவார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார், மாணவரணி தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அதில் ராஜீவ் காந்தி அமர வைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையால் வட இந்தியாவுக்கு மட்டும் சாதகமா.? முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி!
அடிப்படையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி தனது இளமைப் பருவத்தில் சீமான் பேச்சுகளால் கவரப்பட்டு சீமானை போன்று மேனரிசத்தோடு பொதுக்கூட்ட மேடைகளில் பேசி வந்தார். ஒரு கட்டத்தில் சீமானுக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டதால் கட்சியை விட்டு வெளியே வந்து திமுகவில் சேர்ந்தார்.
திமுகவில் சேர்ந்த சில வருடங்களிலேயே அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டதால் ராஜீவ் காந்திக்கு அடிச்சது ஜாக்பாட் என்று சொல்லலாம்.
அண்ணா அறிவாலயம் எனப்படும் திமுக தலைமை அலுவலகத்திற்கு மிக அருகிலும், உதயநிதியின் கைவசம் உள்ள இளைஞரணி அலுவலகத்திற்கும் நேர் எதிரில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வக்கீல் தொழிலோடு அரசியல் தொடர்பான சமாச்சாரங்களையும் கவனித்து வருகிறார் ராஜீவ் காந்தி.
இந்த நிலையில் தான் கட்சியின் பல சீனியர் தலைவர்களின் மகன்கள் மற்றும் பல ஆண்டுகளாக அந்தப் பதவியை குறிவைத்து திமுகவில் வேலை செய்து வந்தவர்களிடையே ராஜீவ் காந்தியின் திடீர் நியமனம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி திமுக தலைவர் கருணாநிதியையும் மற்றும் அவரது குடும்பத்தினரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வரும் வீடியோக்கள் கடந்த பல மாதங்களாகவே இணையத்திலும், டிவி சேனல்களிலும் எதிர்க்கட்சியினர் அதிக அளவில் பரப்பி வந்தனர். இருந்தாலும் கூட திமுக தலைமை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துடிப்பான இளைஞர் அந்த பதவிக்கு வர வேண்டும் என்பதாலும் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் என்பதாலும் அந்த பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டு அவருக்கான அசைன்மென்ட் முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக கூறினாராம். எது எப்படியோ நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்து சேர்ந்த சில வருடங்களிலேயே திமுகவின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான மாணவர் அணி செயலாளர் பதவியை ராஜீவ் காந்தி அடைந்திருப்பது மிகப்பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நேற்று ஒடிசா.. இன்று கர்நாடகா, ஆந்திரா... தமிழக அரசின் முயற்சி பலிக்குமா..?