×
 

'செங்கோட்டையன், எடப்பாடியாரை விட பெரிய கொம்பனா..?' விஜயை விமர்சித்தது ஏன்? - சீமான்

இவர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இங்கு இருக்கிற சிக்கல்கள் தெரியும்.

தவெகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பண்ணெடுங்காலமாக  நீங்கள் கட்சி அரசியல், தேர்தல் அரசியலையே முன்னெடுத்து வருகிறீர்கள். நீங்கள் மக்கள் அரசியலிலே பேசமாட்டேன் என்கிறீர்கள். அதை முன்னெடுக்க மாட்டேன் என்கிறீர்கள். தேர்தல் வியூக வகுப்பாளர், தேர்தல் வியூகம் என்கிற நிலைக்கு வந்து விட்டீர்கள். அப்படி என்றால் தேர்தலில் வெல்வது மட்டும் தான் நோக்கமா?  அது வியாபாரமா? இல்லையா? ஊடகங்களை வாங்குவது, அவர்களுக்காக பேசுவது, இதை இப்படி செய்யுங்கள்... அதை அப்படி செய்யுங்கள். இதைப்பேசு… இப்படி நட…   இது வெறும் தேர்தல் அரசியல் தான் மக்கள் அரசியல் எப்போது வரும்?

இந்த மக்களுக்கு இது பிரச்சனை. இந்த போராட்டங்கள் நடந்திருக்கிறது. இந்த கோரிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அந்த கோரிக்கைகளுக்கான காரணம் இது. அந்த கோரிக்கைகளுக்கான தீர்வு இது. இதை வைத்து நடக்கிற அரசியல்தான் இங்கு தேவை. என் தம்பி விஜய்க்கு ஐயா ஜான் ஆரோக்கியசாமி என்கிற வீயூக வகுப்பாளர் இருக்கிறார். அதற்கு அடுத்து தம்பி ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். இவர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இங்கு இருக்கிற சிக்கல்கள் தெரியும்.

இதையும் படிங்க: தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள்?... - அண்ணாமலையை கலாய்த்த சீமான்

பீகாரிலிருந்து ஒருத்தர் வரவேண்டும். ஆந்திராவில் இருந்து சுனில், பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் வரவேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை என்று இருக்கிறதா? அறிவு என்று ஒன்று இருக்கிறதா? வெளியில் இருந்து பார்ப்பவர்கள் தமிழ்நாட்டில் ஒருத்தனுக்கும் ஒன்றும் இல்லை போல. பீகாரிலிருந்து எவனோ ஒருத்தன் வந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லை ஆந்திராவில் இருந்து ஒருத்தர் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே தான் இரண்டு வீக வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் இப்போதும் கேட்கிறேன் திருப்பரங்குன்றத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது அல்லவா? அது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அத்திக்கடவு-  அவிநாசி என்றால் தெரியுமா? நொய்யல் ஆறு என்று ஒன்று இருக்கிறது அது பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அப்புறம் எதுக்கு இங்கே வருகிறார்கள். அய்யா கருணாநிதி, அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை இது தேவைப்படவில்லையே. இப்போது நான் கேட்கிறேன். அதிமுகவில்  ஐயா செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு தெரியாததா? அவர்கள் எல்லாம் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வந்தவர்கள் தானே.

 திமுகவிலும், துரைமுருகன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆ.ராசா, கே.என்.நேரு இவர்களை எல்லாம் தாண்டி  இவர்களை எல்லாம் தாண்டிய கொம்பனா? பிரசாந்த் கிஷோர். எதையாவது பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பல கட்சிக் கூட்டணி. எப்படியும் இந்த பத்தாண்டு ஆட்சிக்கான மாறுதலை மக்கள் விரும்பும் போது குருவி உட்கார்ந்து பழம் விழுந்த கதைதான். பீகாரில் நின்றாயே ஒற்றை தொகுதியிலாவது ஜெயித்தாயா? உன் தேர்தல் வியூகம் என்னாச்சு? எளிய பிள்ளைகள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எங்களைப் போன்றவர்கள் நிற்கிறார்கள். நீ காசு கொடுக்காமல் வேலை செய்வாயா? தமிழகத்தில் மாபெரும் மேதைகள் இருக்கும்போது பீஹாரிலிருந்து பிரசாந்த் கிஷோர் எதற்கு?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் என்ற மீனை வலையில் சிக்க வைக்க ‘ஒய்’ பாதுகாப்பு - அமைச்சர் ரகுபதி கலாய்ப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share