'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!
வேறு வழியின்றி, அன்று மாலையில் ஆர்.பி.உதயகுமார் மறுப்புச் சொன்னதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.
மதுரை மாநகரின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு இது சோதனைக் காலம் போல. அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்கொடி தூக்கியதற்கு ஆ.பி.உதயகுமார் கடும் எதிர்வினையாற்றினார்.
''மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம் அதிமுக. அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மனவலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி.எதிரிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. சந்தித்த சோதனைகள் அத்தனையையும் தகர்த்து அதிமுகவை வழிநடத்தி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி'' என செங்கோட்டையனின் பெயரை உச்சரிக்காமல் ஊசியேற்றினார் ஆர்.பி.உதயகுமார்.
செங்கோட்டையனை காலையில் ஆர்.பி.உதயகுமார் வசைபாடிவிட்டு ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்க, செங்கோட்டையனே அன்று மாலை ஆர்.பி.உதயகுமாரை நேரடியாக போனில் அழைத்து வெளுத்து வாங்கி விட்டாதாக கூறுகிறார்கள். வேறு வழியின்றி, அன்று மாலையில் ஆர்.பி.உதயகுமார் மறுப்புச் சொன்னதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஆடிப்போன ஈபிஎஸ்...!
இதுஒருபுறமிருக்க, ''முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி...நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது..?''என்று ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் வாரிசு ரவீந்திரநாத் வம்புக்கு இழுத்து, எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தருவதாக கூறிக்கொண்டு, மைக்கை நீட்டிய செய்தியாளர்களிடம் ஏகத்துக்கும் கடுப்பான ஆர்.பி.உதயகுமார் ‘அப்பாவும் மகனும் பலாப்பழத்தில் நின்னுட்டு என்னைப் பற்றி பேசலாமா?’ என பொங்கி வழிந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓ.பி.எஸ். ''அதிமுகவில் டாக்டர்.வெங்கடேசன் பாசறை மாநிலச் செயலாளராக இருக்கும் போது என் மகன் ரவீந்திரநாத்தையும், ஜெயபிரதிப்பையும் அழைத்து யாராவது ஒருவர் தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை என் மகன்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். அதை கேட்க நான் டாக்டர். வெங்கடேசனை நேரில் சந்திக்கச் சென்றபோது வெங்கடேசன் எந்த சோபாவில் உட்கார்ந்து இருந்தார்... உதயகுமார் அப்போது எந்த நிலையில் இருந்தார் என்பதை எல்லாம் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதைச் சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது..'' என ஒரு பிட்டைப்போட்டிருக்கிறார்.
ஆனாலும், காரியம் ஆகவேண்டுமானால், யாரையும் புகழ் பாடியும், அவர்கள் அசந்தால் ஒரே அடியாக தூக்கிப் போடுவதிலும் கை தேர்ந்தவர். ஓபிஎஸின் இந்தப்பேச்சுக்கும், அவரது மகனின் இந்த பதிவுகும் எல்லாம் பதற்றப்பட மாட்டார் என்று கட்சிக்காரர்களே பிறர் காதுபட பேசிக் கொள்கின்றனர்.
இத்தோடு ஆர்.பி.உதயகுமார், தற்போது புதிதாக தொடங்கி இருக்கும் திண்ணை பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை என்கிறார்கள்.திரைத்துறையில் சொந்த சகோதரருக்கென தன் அரசியல் பலத்தில் சேர்த்ததில் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார் எனும் பேச்சும் கட்சியினரிடம் ஓங்கி ஒலிக்கிறது. கையில் கிடைத்த ஆயுதமாக கட்சிப்பிரசாரத்தில் கரண்டி பிடித்துக் கொண்டு புரோட்டா போட்டு போஸ் கொடுத்தாலும் இனி மதுரையில் அவரது செல்வாக்கு எடுபடாது என்கிறார்கள் அதிமுகவில் உள்ளவர்களே.
வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வது என்பது இதுதானோ..?
இதையும் படிங்க: அதையெல்லாம் சொன்னால்… எடப்பாடியாரின் டீமுக்கு ஓ.பி.எஸ் மிரட்டல்..!