×
 

மனைவியின் இதயத்தை துளைத்த 29 குண்டுகள்.. இதயம் என்ற பகுதியே இல்லாமல் போன சோகம்.. கோவை ஆசிரியை கொலையில் நடந்தது என்ன..?

கோவையில் பள்ளி ஆசிரியை தனது கணவரால் சுடப்பட்டு இறந்த வழக்கில், அவரது உடலில் இருந்து 29 குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த ஈரட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். வயது 53. இவரது மனைவி சங்கீதா. வயது 47. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முறையே அவர்கள் பதினொன்றாம் வகுப்பும், எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். கிருஷ்ணகுமார் மலேசியாவில் ஒரு டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பியவர். தற்போது விவசாயம் செய்து கொண்டே, சுற்றுலா ஏற்பாடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே கிருஷ்ணகுமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் இருவரும் விவாகரத்து பெறும் மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கிருஷ்ணகுமார், தனது சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் பகுதியில் பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அவ்வப்போது கோவைக்கு வந்து தனது இரண்டு மகள்களையும் பார்த்துவிட்டு செல்வாராம் கிருஷ்ணகுமார். அவ்வாறே கடந்த புதன்கிழமையும் தனது மகள்களை பார்க்க கோவை வந்துள்ளார் கிருஷ்ணகுமார். இரண்டு மகள்களை சந்தித்து இருவருக்கும் பாஸ்போர்ட் எடுப்பது தொடர்பாக பேசி உள்ளார்.

இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!

பின்னர் மகள்கள் பள்ளி கிளம்பி செல்லும் வரை காரிலேயே காத்திருந்த கிருஷ்ணகுமார், அதன்பின் வீட்டினுள் சென்றுள்ளார். மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்து கொண்டு வந்திருந்த ஏர் கன் (AIR GUN) மூலம் மனைவியின் இதயத்தை குறி பார்த்து சுட்டுள்ளார் கிருண்ஷகுமார். தொடர்ச்சியாக பல குண்டுகள் அவரது இதயத்தை துளைத்துள்ளது.  அதன்பின் தனது காரில் ஏறி கேரளாவுக்கே சென்றுள்ளார். காரில் போகும் வழியில் மனைவி குடியிருந்த வீட்டின் குடியிருப்போர் சங்கத்தின் வாட்சப் குழுவில் தனது குடும்ப பிரச்னை குறித்து பேசி பதிவிட்டுள்ளார்.

அதில் தான், தனது மனைவி சங்கீதாவை கொன்றுவிட்டதாகவும் தான் நீண்ட காலம் வாழ மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அதை பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் போலீஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் நேரில் வந்த போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரை கைது செய்ய கேரளா சென்ற போது, மனைவியை கொன்ற அதே துப்பாக்கியால் அவரும் சுட்டுக்கொண்டு இறந்தது தெரிந்தது. தந்தையும், தாயும் இறந்த நிலையில் அவர்களது இரண்டு குழந்தைகளும் தற்போது சங்கீதாவின் தாய் வீட்டில் உள்ளனர்.

இதற்கிடையே சங்கீதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் சங்கீதாவின் உடம்பிலிருந்து 29 க்கும்  மேற்பட்ட சிறு சிறு இரும்பு குண்டுகள் கண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சங்கீதாவின் மார்பில் சுடப்பட்ட துப்பாக்கி கொண்டு நெஞ்சு பகுதி முழுவதும் சிதறி சென்றுள்ளது. இதயம் எனும் ஒரு பாகம் இல்லாத அளவிற்கு துப்பாக்கிக் கொண்டு பாய்ந்ததன் தாக்கம் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகுமார் வீட்டில் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய இரண்டு பெட்டி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தூக்கி வீசப்பட்ட அமித்ஷா படங்கள்..! ரணகளம் செய்த கோவை பாஜகவினர்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share