புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்
மாநில சுயாட்சி என்கிற கோஷங்கள் உள்ள நிலையில் புதிய கல்வி கொள்கையின் ஏற்கத்தக்க விஷயங்களை ஏற்று மறுக்கும் விஷயங்களை மறுத்து செயல்படாமல் வெற்று கோஷங்களில் இயங்கும் மாநில அரசை அழகாக மடைமாற்றி புதிய கல்விக்கொள்கை பெயரால் தன் பிடியை இறுக்குகிறது மத்திய அரசு.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு செக் வைக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யூஜிசி அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து, ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யூ.ஜி.சி. வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என யூ.ஜி.சி. யின் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்கிற யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது. இது பல்கலைகழகத்தின் உறுப்பினர்களில் வெளியாட்களை திணிக்கும் முயற்சி.
கல்வியில் வலதுசாரி சித்தாந்தம் கொண்ட நபர்களை அதிகப்படியாக திணிப்பதன் மூலம் தமிழகத்தின் கல்வித்துறையில் வலதுசாரி சித்தாந்தத்தை திணிக்கும் போக்கு நடக்கும், கல்வியாளர் அல்லாதவர்களை பல்கலைக்கழகங்களில் பொறுப்பேற்க அனுமதிப்பதும் கட்டுப்பாட்டை மையப்படுத்துவதும் நமது கல்வி முறையின் தரம் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தொடர்ந்து அதிகரிப்பது குறித்து போராட்டம் நடத்தாமல் தேசிய கீதம் இசைக்கும் விவகாரம் போன்ற விஷயங்களில் ஆளுநரை கண்டித்து கோபாவேசமாக பேசுவது மத்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்பதே கள நிலவரம் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆல் பாஸ்’ முறை ரத்து.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு
இதுகுறித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தலைவர்கள் பேசவே இல்லை. யூஜிசி புதிய விதிகள் குறித்து அந்த தலைவர்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை. இத்தனைக்கும் பல பேர் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள். போராட்டத்தில் இதுபற்றி யாரும் வாய்திறக்கவில்லை. கவர்ச்சிகர கோஷமாக ஆளுநரை கிண்டல் செய்தும், பாஜக அதிமுக உறவு என்றும், ஆளுநருக்கு எதிராக பெரிதாக வெற்று கோஷங்களும் வீராவேச வசனங்களும் தலைவர்களால் வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து தற்போது முதல்வர் எதிர்ப்பை தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், ”புதிய UGC விதிமுறைகள் துணை வேந்தர் நியமனங்கள் மீது ஆளுநர்களுக்கு அதிகாரத்தை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது ஆகியவை கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அதிகாரமற்றதாக மாற்றவும் முயல்கிறது. பாஜக அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்களால் கட்டளையிடப்படாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் கல்வி இருக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டு இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது நிறுவனங்களின் சுயாட்சி உரிமை பறிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. கல்வி என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் உள்ள ஒரு பாடமாகும், எனவே யுஜிசி இந்த அறிவிப்பை ஒருதலைப்பட்சமாக வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த அத்துமீறலை ஏற்க முடியாது, தமிழகம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடும்”. என்று தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி மீதான இந்த அப்பட்டமான தாக்குதலை எதிர்ப்பதில் நாங்கள் உங்களுடன் உறுதியாக நிற்கிறோம். கல்வியே நமது முன்னேற்றத்தின் அடிக்கல்லாக உள்ளது, மேலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் சிறப்பான முன்னேற்றத்தை கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் கல்வியாளர் அல்லாதவர்களை பொறுப்பேற்க அனுமதிப்பதும் கட்டுப்பாட்டை மையப்படுத்துவதும் நமது கல்வி முறையின் தரம் மற்றும் சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்குகிறது.
அனைவரும் ஒன்றிணைந்து, இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலை எதிர்ப்போம் மற்றும் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்” என சமூக வலைதளங்களில் எதிர்ப்புகுரல்கள் எழும்ப தொடங்கியுள்ளது. இந்திய மாணவர் சங்கமும் தனது எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளும் விரைவில் களத்தில் குதிக்கும். கல்வி உரிமையை பாதுகாக்க தமிழகத்தில் மீண்டும் ஒன்றுபட்ட இயக்கம் தொடங்கப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்றப்படவும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: அடி தூள்..!டெல்லி பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய்,:காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!