×
 

எகிறி அடிக்கும் ஸ்டாலின்... தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் எங்கு தெரியுமா? 

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டமானது இன்றைய தினம் சென்னையில் இந்த ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7  மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். 

 

கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 
கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவிலிருந்துருந்து ஒய்ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் சீரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தெலங்கானாவிலிருந்து  காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஒடிசாவிலிருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து  முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர் . 

கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை என்றும் அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துவதாக கூட்டத்தின் நோக்கத்தை முதலில் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் நமது எண்ணிக்கை குறைவது மட்டும் பிரச்னை அல்ல, நமது உரிமைகள் பறிக்கப்படப் போகிறது என்பதே கவலை என்றார். மாநிலங்களுக்கு சேரவேண்டிய நிதியைக் கூட போராடி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று அவர் கவலை தெரிவித்தார். 

பின்னர் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்றார். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தொகுதி மறுசீரமைப்பு எவ்வாறு செயல்படுத்தப்பட போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மக்கள் தொகையை பல்வேறு திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா என்று கேள்வி எழுப்பினார். கட்சி வேறுபாடுகளை களைந்து நாம் போராட வேண்டிய நேரம் என்று அவர் குறிப்பிட்டார். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை என்றும் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பாக டெல்லியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்  “எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடியவில்லையோ அந்த மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை குறைக்கவும், எங்கெல்லாம் தங்களால் வெற்றி பெற முடிகிறதோ அங்கெல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிடுவதாக” தெரிவித்தார். 

தொடர்ந்து கூட்டத்தில் அடுத்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை தனது மாநிலத்தில் நடத்த வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் விருப்பம் தெரிவித்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என  அறிவித்தார். சென்னையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டம் நிறைவடைந்தது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share