மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!
ஒடிசாவில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலில் கெட்ட ஆவி புகுந்ததாக கூறி குழந்தையின் உடலில் பழுக்க காய்ச்சிய கம்பியால் 40 முறை சூடு வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
அறிவியலும், நாகரீகமும் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் சில மக்கள் மூட பழக்க வழக்கங்களில் மூழ்கி உள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கு பழக்கங்களை சம்பிரதாயம் என்கிற போர்வையின் கீழ் கடைபிடிக்கின்றனர். ஆவி, பேய், பிசாசு, ஏவல், சூன்யம் போன்ற மூட நம்பிக்கை மற்றும் கண்மூடி பழக்கங்களில் மூழ்கி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளும் குடும்பத்தினரும் பல பல சிக்கல்களையும் , இன்னல்களையும் அனுபவிக்க நேர்கிறது. முன்னேறிய நகரங்கள், பெருநகரங்களில் இவ்வாறன மூட பழக்கங்கள் சற்றே குறைவாக காணப்பாட்டாலும் கிராமங்களிலும் அடர் வன பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேவும் இந்த பழக்கங்கள் ஆழமாக வேரூன்றி காணப்படுகிறது.
இவ்வாறு பழக்கங்களின் ஒன்றாக, நோய்வாய்பட்ட குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக நம்பி, அந்த ஒருமாத குழந்தையின் உடலில் இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி, வயிறு முதல் தலை வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஒடிசாவில் தான் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாத குழந்தைக்கு மட்டுமல்லாமல், 6 வயது சிறுமிக்கும் இதே போன்ற ஒரு சிகிச்சை முறை நடந்துள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு சிறுவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!
இருப்பினும் இது போன்ற ஒரு மூட பழக்க வழக்கத்தில் இருந்து பெற்றோர் மீள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தின் சந்தாஹண்டி தொகுதியில் உள்ள கம்பரிகுடா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஃபண்டல்பாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். இவருக்கு கடந்த மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் குழந்தைக்கு சளி தொல்லை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு காய்ச்சலும் அடித்ததால் உடலும் உஷ்ணமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் பெற்றோர் குழந்தையை உள்ளூர் பாரம்பரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த அந்த போலி மருத்துவர் குழந்தையின் உடலில் கெட்ட ஆவி புகுந்துள்ளதாகவும் இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி சூடு வைத்தால் ஆவி விலகி விடும் என்றும் குழந்தை குணமடைந்து விடும் என்றும் கூறி உள்ளார். இதனை பெற்றோர் மறுவார்த்தை பேசாமல் நம்பி உள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் அந்த போலி மருத்துவர் சூடு போடவும் அனுமதித்துள்ளனர். 3 முதல் 4 நாட்கள் இந்த சிகிச்சை முறை தொடர்ந்துள்ளது. இதனால் குழந்தையின் உடலில் 40 இடங்களில் சூடு வைக்கப்பட்டது. இதில் குழந்தை உடல்நிலை மிகவும் ஆனதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கே குழந்தையின் நிலையை பார்த்த டாக்டர், போலீஸில் புகார் அளிக்கவே இதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல் ராய்க்கர் தொகுதியில் உள்ள நக்தி சிம்டா கிராமத்தைச் சேர்ந்த ராம்லு கோண்டின் ஆறு வயது மகள் மீது சுமார் 30 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டுள்ளது. சிறுமி நீண்ட காலமாக சளி, காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அண்டை நாடான சத்தீஸ்கரில் உள்ள கொண்டகான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது இரண்டு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக நபரங்பூர் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார். அவர்கள் விரைவாக குணமடைவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
ராய்கர் மற்றும் சந்தாஹண்டி தொகுதிகளின் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகளுக்கு இந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். நீண்ட காலத்திற்குப் பிறகு நபரங்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் மீண்டும் விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் குளித்த விஜயகாந்த் குடும்பம்..! நெத்தியில் பட்டையோடு போட்டோ..!