வெற்றிகரமாக முடிவடைந்த 2 நாள் பயணம்.. டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி..!
மொரீஷியஸ் நாட்டிலிருந்து இன்று டெல்லி திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி.
இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று டெல்லி திரும்பினார்.
போர்ட் லூயிஸ் நகரத்தில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றுக் கொள்வது மற்றும் புனிதமான கங்கை ஆற்றின் தண்ணீரை தலாவோ ஏரியில் ஊற்றி பிரார்த்தனை செய்தது உள்ளிட்ட தனது பயணத்தின் இரண்டாம் நாள் சிறப்பம்சங்களையும் மோடி பகிர்ந்து கொண்டார்.
மொரிசியஸ் ஏரியான கங்கா தலாவோவிற்கு அவர் சென்ற போது அவரைப் பார்ப்பதற்காக பல கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து நின்றனர்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா மட்டும் இருந்திருக்கணும்.. மும்மொழியை ஏற்றுக் கொண்டிருப்பார்.. டிடிவி தினகரன் ஒரே போடு!
இரண்டாம் நாள் பயணமான புதன்கிழமை அன்று பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதை ஜனாதிபதி நவீன்சந்திர ராம்கூலம் வழங்கினார். மொரிசியஸ் நாட்டின் தேசிய தின விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் அவர் முதல் முதலில் இந்த கௌரவத்தை பெற்றிருந்தார்.
கங்கா தலாவோ ஏரியில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி, திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் போது எடுத்துக் கொண்டு சென்ற புனித நீரை கலந்தார்.
அத்துடன் மொரிசியஷின் மிக உயர்ந்த தேசிய தேசிய விருதை (The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean) பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். தேசிய தினத்தில் அவர் இந்த விருதை ஏற்றுக் கொள்வதை காண கன மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
"இந்த நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது எனக்கு வழங்கப்பட்டதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய மரியாதை மட்டுமல்ல, 1.4 பில்லியன் இந்தியர்களின் மரியாதை இது. இந்தியாவிற்கும் மொரிசியஸ் நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஒரு அஞ்சலி.
இது பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாகும். மேலும் இது உலகளாவிய தெற்கின் பகிரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அபிலாசைகளின் சின்னமாகும்' என்று விருதை பெற்றுக் கொள்ளும் போது பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி இருந்தார்.
பிரதமர் நவீன் சந்திர ராம் கூலத்துடன் இணைந்து பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் அமைந்துள்ள பொது சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிறுவனம் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: செல்லுமிடமெல்லாம் "மோடிக்கு" விருது..! 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணித்த மோடி..!