‘மான்போல, இப்போது தீவிரவாதம்’! டெல்லி முதல்வர் அதிசியை வம்பிழுக்கும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி
டெல்லி முதல்வர் அதிசியை முதலில் மான் என்று கிண்டல் செய்த நிலையில் இப்போது, அதிசியின் பெற்றோர் தீவிரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர்கள் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி தெரிவித்துள்ளார்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது, 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, உத்தவ்தாக்கரே சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி தனித்து, ஆம் ஆத்மி கட்சி, பாஜவை எதிர்த்து களத்தில் நிற்கிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் ஆட்சிக்கு வரமுடியாமல் தவிக்கின்றன. இரு கட்சிகளுமே இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதால் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வராக இருக்கும் அதிசி கல்காஜி தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக பாஜக தலைவர் ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார்.
ரமேஷ் பிதூரி ஏற்கெனவே முதல்வர் அதிசி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். 4 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே வராத அதிசி, இப்போது தேர்தல் நேரத்தில் கிர்னிமான் போல் வருகிறார், வாக்குகளுக்காக மக்களைச் சந்திக்கிறார் என்று பேசியிருந்தார். மேலும், அதிசி தனது தந்தையின் பெயரையே அரசியல் லாபத்துக்காக மாற்றியுள்ளார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு...
இந்நிலையில் கல்காஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் “ டெல்லி முதல்வர் அதிசியின் பெற்றோர் சாதாரணமானவர்கள் அல்ல. நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உதவிய அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அப்போது அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கிடக்கூடாது என்று ஆதரவு அளித்தவர்கள் அதிசியின் பெற்றோர். அப்போது குடியுரசுத் தலைவருக்கு அதிசியின் பெற்றோர் கடிதம் எழுதி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்கக் கோரினர். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதும், அவருக்காக அதிசியின் தாய் இரங்கல்கூட்டமும் நடத்தினார்” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியின் சகோதரர்கள் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை கல்காஜி தொகுதியில் தாக்கியுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது, இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் முதல்வர் அதிசிகடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி! வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய பாஜக: கெஜ்ரிவால் கிண்டல்