எஸ்.பி. வேலுமணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... அதிமுக பாசம் அவ்வளவு லேசுல விடுமா?
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் - தீக்ஷனா திருமணம் கடந்த வாரம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவது பிடிக்காததால் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமின்றி அண்ணாமலையை எழுந்து நின்று வரவேற்று, நலம் விசாரித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.
இதனால் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாக்கூட செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அவருடன் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரும் பங்கேற்றார். இதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுகவில் ஒன்றாக பயணித்தாலும், எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதும், மீண்டும் கூட்டணியை மலர வைக்க முயற்சிப்பதும் கட்சியின் சீனியர்களான ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு துளியும் பிடிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகக்கூட அதிமுக - பாஜக கூட்டணி இடையே விரிசல் விழுவதற்கு முன்னதாக ஊடகங்களில் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் அளித்த பேட்டிகள் பரபரப்பைக் கிளப்பின.
கடந்த மார்ச் 6ம் தேதி அன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக - பாஜக கூட்டணி உடைய அண்ணாமலை தான் காரணம் என்றும், கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தலைவர்களை அவர் விமர்சித்தது தவறு. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களை கைப்பற்றியிருக்க முடியும்” என பேசியிருந்தார். மறுதினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எக்காரணம் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். அதுவே இறுதியானது” எனக்கூறியிருந்தார்.
இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை எஸ்.பி.வேலுமணி விரும்புவதும், அதிமுக தலைமைக் கழகம் வெறுப்பதும் வெட்ட வெளிச்சமானது. இரு முன்னாள் அமைச்சர்களின் பேட்டியும் ஊடகங்களில் வைரலான விவாதமாகவே மாறியது. கருத்தியல் ரீதியாக இப்படி எதிரும், புதிருமாக பேசி வந்தாலும், கட்சி என்று வந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஓரணியில் திரண்டு நிற்பார்கள் என்பதை ஜெயக்குமார் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி மீது இருக்கும் ஆதங்கத்தை உள்ளே வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவரது மகன் திருமண விழாவிற்கு வந்து சென்றது எந்த அளவிற்கு அதிமுக தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோ, அதே அளவிற்கு ஜெயக்குமார் அவர்களின் வருகையும் தனி கவனத்தை பெற்றுள்ளது. எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் இடையே சின்ன, சின்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் அதிமுகவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். சொன்னது போல் “ஒரு தாய் மக்கள் நாம் என்போம்” என்பது போல், எஸ்.பி.வேலுமணி வீட்டு இல்லத்திருமண சபையை சிரித்த முகத்துடன் பங்கேற்று நிறைக்க வைத்திருக்கிறார் ஜெயக்குமார் என அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
என்ன தான் இருவரும் மாறி கருத்துக்களைக் கூறிக்கொண்டாலும் அனைத்துமே கட்சியின் வளர்ச்சிகாக தானே ஒழிய, தனிப்பட்ட கருத்துக்கள் கிடையாது என்பது இத்தோடு நீருபிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் சண்டை போட்டாலும் அதிமுக உடன் பிறப்புகளை பிரிக்க முடியாது என்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.