×
 

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி காலமானார்.

இதையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, தவெக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் 46 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - 46 பேர் போட்டி

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமி அனுமதி பெறாத இடங்களில் வாக்கு சேகரித்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் கன்கரா நடந்து கொள்வதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். 

இதற்கு ராஜகோபால் கன்கரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எந்தெந்த இடங்களில், எத்தனை மணிக்கு பிரசாரம் செய்யப் போகிறோம் என அரசியல் கட்சிகள் சார்பில் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படுகிறது. அவற்றுக்கு உரிய முறையில் உடனுக்குடன் அனுமதி தருகிறோம் என அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி திடீரென மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மணீஷ் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்புகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் தான் மாற்றப்பட்டுள்ளார். மணீஷ்-க்கு பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் என்பவர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றிரவே ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணிகளை தொடங்கி உள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share