சனாதனத்தின் வழிகாட்டி திருவள்ளுவர்.... ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்த சர்ச்சை..
தமிழையும், திருவள்ளுவரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் தமிழர்களின் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து விட்டவர் திருவள்ளுவர்.
பேச்சுவழக்கில் கூட திருக்குறளை மேற்கொள் காட்டுவது தமிழர்களின் பழக்கங்களில் ஒன்று. திருவள்ளுவரையும், திருக்குறளையும் போற்றும் வகையில் கன்னியாகுமரியின் கடல் எல்லையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் வெள்ளிவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் வேளையில் திருவள்ளுவர் தினமும் போற்றப்படுகிறது. இதன்ஒருபகுதியாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் தள பக்கத்தில் செய்தி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக-வை வெறுப்பேற்றும் காலண்டர்..! காவி- விபூதி பட்டை போட்ட திருவள்ளுவர்..!
அதில் "" பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் மிகுந்த பக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் அவர்களுக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன."" என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஆனால் அவரை ஒரு அரசியல் கருவியாக ஆளுநர் பார்க்கிறாரோ என்று ஒருசிலர் கருதுகின்றனர். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து உருவப்படம் ஒன்றை ஆளுநர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திருவள்ளுவர் ஒரு சனாதனி என்றும் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. வள்ளலாரையும் சனாதனி என்றும் ஆளுநர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழ்நிலையில் திருவள்ளுவரை சனாதனத்தின் வழிகாட்டி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று எழுதிய திருவள்ளுவரை எப்படி சனாதனி என குறிப்பிடலாம் என கேள்வி எழுந்துள்ளது. பிறப்பின் பெயரால் பேதம் பார்க்கும் கொள்கைகளை பின்பற்றும் ஆளுநர், பிறப்பால் ஒருவரை ஏற்றத்தாழ்வுடன் பார்க்கக் கூடாது என கூறிய திருவள்ளுவரை சனாதனி எனக் கூறலாமா? என்பது அவர்களின் கேள்வி.
ஒருபக்கம் சட்டப்பேரவையில் வெளிநடப்பு மறுபக்கம் திருவள்ளுவர் ஒரு சனாதனி என அடுத்தடுத்து அரசியல் அம்புகளை ஏவி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு தமிழக அரசு கொடுக்கப் போகும் விளக்கம் என்ன என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 2 ஆயிரம் அரிசியில் 3 அடி உயர திருவள்ளுவர் சிலை .. வியக்க வைத்த ஓவியா ஆசிரியர்