×
 

மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக இடைவிடாத கனமழை பெய்து வரும் சூழலில், உளுந்தூர்பேட்டையில் மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற ஒய்வு பெற்ற காவலர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று (மாா்ச் 11) முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில்  கனமழை வெளுத்து வாங்கியது. ராமநாதபுரம் பேருந்து நிலையம், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீரானது குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய நபர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மன்னார்குடி பகுதியில் 4 மணிநேரமாக கனமழை கொட்டி தீர்த்ததால் கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு!

இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் மழைக்காக ஒதுங்கி நின்ற ஒய்வு பெற்ற காவலர் உட்பட இருவர் மின்னல்தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் மாவட்டத்தின் அநேக இடங்களில் ‌ பரவலாக கனமழை பெய்தது. கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை மற்றும் மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற காவலர் காசிலிங்கம் மற்றும் களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர், அவரது பேரன் சூர்யா ஆகிய மூவரும் மழைக்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது மின்னல் தாக்கியதில் ஓய்வு பெற்ற காவலர் காசிலிங்கம் மற்றும் ராமர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அருகில் நின்று கொண்டிருந்த ராமர் பேரன் சூர்யா பலத்த காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் இறந்துபோன காசிலிங்கம், ராமர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களே உஷார்! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share