கோகுல்ராஜ் கொலை வழக்கை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. சேலம் மாவட்டம் ஓமலூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர், சுவாதி என்ற இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு ஜுன் 23-ந் தேதி திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்றனர். அங்கு வந்த தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலர் கோகுல்ராஜை தூக்கிச் சென்றனர். மறுநாள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளம் ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய பத்து பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்திருந்தது. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, "குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சாதி என்கிற பேயின் பிடியில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியாக இருந்த முதியவர்கள் அடித்துக்கொலை.. வீட்டிற்கு தீ வைத்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!
இந்த வழக்கு மனித நடத்தையின் கருப்புப் பக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. சாதிய அமைப்பு, மதவெறி, விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த மக்களை மனிதத்தன்மை அற்ற முறையில் நடத்துவது போன்ற நம் சமூகத்தின் அசிங்கமான அம்சங்களின் மீது நம் கவனத்தை ஈர்க்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி யுவராஜ், 2 நாட்களுக்கு முன்னர் பரோலில் வெளிவந்தார். அவரது மகள் அஞ்சனாவின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவருக்கு பரோல் அளிக்கப்பட்டிருந்தது. சிறையில் அவரது நன்னடத்தைக் காரணமாக பரோல் அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனிடையே சிறையில் இருந்து பரோலில் வந்த யுவராஜ் குறித்து கடந்த 2 நாட்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்களும், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களும் ஏராளமான பதிவுகளை இட்டு வருகின்றனர். அதில் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்த போராளி போலவும், தங்கள் சாதிப்பெருமையை நிலைநாட்ட இன்னும் எத்தனை கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போலவும் பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
கோகுல்ராஜை பறிகொடுத்த குடும்பம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. ஆனால் நன்னடத்தைக் காரணமாக யுவராஜ் வெளிவந்து விட்டார். சாதிப்பெருமை பதிவுகளும் ஏராளமாய் வெளிவருகிறது. நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரமிது.
இதையும் படிங்க: புதுச்சேரி நண்பருக்கு ஸ்கெட்ச் போட்ட குரூப் கைது.. மனைவியிடம் ரூ.10 லட்சம் பேரம் பேசியது அம்பலம்..!