ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 50 சதவீதத் தொகையை செலுத்தினால் மட்டும் திருத்துறைப்பூண்டி நகராட்சி தனது வங்கிக்கணக்கை கையாளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பல்வகை நிரந்தரமில்லாத ஒப்பந்தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தவேண்டிய சட்ட வரையறைக்குள் வராமல் இருந்து வந்தன.

கடந்த 2011 -ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் நலத்துறையும், 2016- ஆம் ஆண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் அரசாணை மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அனைத்தும் வருங்கால வைப்பு நிதிச் செலுத்தவேண்டிய சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதையும் படிங்க: ஈஷா அறக்கட்டளைக் கட்டிய தகனமேடை.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
அதனடிப்படையில், கடந்த ஜனவரி-2011 முதல் டிசம்பர் - 2021 வரையிலான காலத்திற்காக ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக கட்டவேண்டுமென்று திருச்சி மண்டல உதவி ஆணையர் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு 12/11/2024 அன்று உத்தரவிட்டார். உத்தரவை மதிக்காமல் இருந்த திருத்துறைப்பூண்டி நகராட்சியின் வங்கிக்கணக்கை அதே திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் முடக்க உத்தரவிட்டார். வங்கிக்கணக்கை முடக்கியதை எதிர்த்து திருத்துறைப்பூண்டி நகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வருங்கால வைப்பு நிதிக்கழகம் சார்பில் வழக்கறிஞர் மூ.பழனிமுத்து ஆஜராகி வாதாடிய வழக்கை, விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி . எம். தண்டபாணி, ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 50 சதவீதத் தொகையை நான்கு வாரத்தில் திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டும். அத்தொகை செலுத்தியவுடன், திருத்துறைப்பூண்டி நகராட்சி தனது வங்கிக்கணக்கை கையாள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தடையை நீக்கிக்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!