2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தொகுதி மறு சீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39 இல் இருந்து 31 ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசவே வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விளம்பரத்திலேயே ஆட்சி நடத்துகிறது திமுக.. ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு..!

இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.

இதனை அடுத்து நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி மறு சீரமைப்பின் போது பாதிக்கப்படும் மாநிலங்களில் உரிமைகளை மீட்டெடுக்க நியாயமான தொகுதி மறு சீரமைப்பை பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்பிக்களை ஒன்றிணைத்து பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் இருக்குமாறு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்படுகிறது. பிரதமர் மோடி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாக அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் தெரியும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த 25 வருஷத்துக்கு தொகுதி மறுசீரமைப்பு பேச்சே வேண்டாம்..! சட்டசபையில் முதலமைச்சர் உரை..!