சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் உயர உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்! சூடுபிடிக்கும் அரசியல் களம்...

சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1 ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் வகைகளை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.

வானகரம், சூரப்பட்டு, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும், 1ம் தேதி முதல், 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 25 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தும் முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை, மேலும் பாதிக்கும் என்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பொதுமக்களை பாதிக்கும்., பொருட்கள் விலை ஏறும் என எச்சரித்தார்.

எனவே, கட்டண உயர்வை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாநில அரசும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனிடையே, சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து, வானகரம் சுங்கச்சாவடியில் வரும் 1ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநிலம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதிக்காக இனமானத்தை அடகு வைக்குற கொத்தடிமை நாங்க இல்ல.. முதல்வரின் ஃபயர் ஸ்பீச்..!