சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் மின்சார ரயில் சேவையின் மூலம் சென்னைக்குள் வந்து பணி செய்து வருகின்றனர். இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளைகளில் மின்சார ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஏராளமான பெண்களும் தங்களது சொந்த காலில் நிற்கும் எண்ணத்துடன், பணிக்காக சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். இவ்வாறு குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களிடம் சிலர் தவறாக நடக்க முயற்சிப்பது தொடர்கதையாகி உள்ளது. இவ்வாறு மதுராந்தகத்தை சேர்ந்த பெண்கள் இரண்டு பேரிடம் தவறாக நடக்க முயன்றவரை உறவினர்கள் உதவியுடன் அடி வெளுத்து, போலீசாரிடம் பிடித்த கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன். இவர் சென்னை புறநகர் பகுதியில் பிளம்பராக பணியாற்றி வருகிறார். பார்த்திபன் தினமும் மின்சார ரயில் மூலம் சென்னை அல்லது சென்னை புறநகர் பகுதிக்கு சென்று வருவது வழக்கமாக வைத்து வந்துள்ளார். அதே ரயிலில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்வதை வழக்காம கொண்டுள்ளனர். பெண்கள் இருவரையும் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் சந்தித்த பார்த்திபன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் பார்த்திபனின் போக்கு, தவறாக சென்றுள்ளது. இதனை பெண்கள் உணர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தவறு செய்வதாக அந்த பெண்கள் பார்த்திபனை கண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

இருப்பினும் பார்த்திபன் திருந்தியதாக தெரியவில்லை. அந்த பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளார். இதனால் பார்த்திபன் செல்லும் ரயில் பெட்டியில் பயணம் செய்வதை அந்த பெண்கள் தவிர்த்துள்ளனர். வேறு ரயில் பெட்டியில் பயணம் செய்து வந்துள்ளனர். இதைக் கண்ட பார்த்திபனும், அந்த பெண்கள் எந்தப் பெட்டியில் ஏறுகிறார்களோ, அதே பெட்டியில் ஏறி பயணம் செய்வதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். தொடர்ந்து மதுராந்தகத்தை சேர்ந்த இரண்டு பெண்களிடமும், ஆபாசமாக பேசுவது எல்லை மீறி செயல்படுவதை வாடிக்கையாக கடைப்பிடித்துள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த பெண்கள் இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் பார்த்திபனை பார்த்துக் கொள்வதாக கூறி உள்ளனர். இந்நிலையில் இன்று சிக்னல் கோளாறு காரணமாக மதுராந்தகத்திலிருந்து கிளம்ப வேண்டிய ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போதும் பார்த்திபன் அந்த இரண்டு பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். இதனை தொடர்ந்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் இது குறித்து போன் மூலம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்ட பார்த்திபனை , பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது தப்பிய பார்த்திபனை தாக்கியதால் பார்த்திபனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக பார்த்திபன், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரயில்வே வளாகத்திற்குள் நடந்த விவகாரம் என்பதால், மதுராந்தகம் போலீசார் உடனடியாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் இனி ஈசியா சீட் கிடைக்கும்.. 10 நிமிடத்துக்கு முன்பு இதை பண்ணா மட்டும் போதும்.!!