சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் செய்வது, ஒரே மோட்டார் வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது, ஒரு வழி பாதையில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட பல விதிமீறல்களை கண்டறிந்து அதில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இத்தனைக் கோடி இழப்பீடா..?

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும், 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதாகவும் பிடிப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகளும், ஹெல்மெட் போடாமல் சென்றதாக 33 ஆயிரத்து 331 பேர் மீதும் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 261 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது என் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருவதாகவும் சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம்.. மீறினால் அபராதம்.. மாநகராட்சியின் ஸ்ட்ரீட் ரூல்ஸ்..!