திமுக ஆட்சியில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டிவிட்டு யாரோ குளிர் காய பார்ப்பதால் காவல்துறை எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். சீமான் பெரியாரைப் பற்றி சுய விளம்பரத்திற்காக பேசி வருவதாகவும், நாளுக்கு நாள் அவரது பெரியாருக்கு எதிரான பேச்சு அதிகரித்து வருவதாகவும் சாடினார். டங்ஸ்டன் வெற்றி முழுவதும் பாஜகவை சாரும்.டங்ஸ்டன் சுரங்கம் நிறுத்தத்திற்கு பிரதமரும் மத்திய அமைச்சர், அண்ணாமலை ஆகியோர் மட்டுமே காரணம் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி சுயநலதோடு செயல்படுகிறார். அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்றார்.
இதையும் படிங்க: பெரியார் பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கோங்க - சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை!
அதிமுகவுடன் இணைவது என்பது தொண்டர்களின் முடிவு எனக்கூறிய டிடிவி தினகரன், ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் .தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தார்.

டங்ஸ்டன் திட்டம் அமலானால் நான் முதல்வராக தொடர மாட்டேன் என கூறும் முதல்வர் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் மதக்கலாவரத்தை உருவாக்கி யாரோ குளிர்காய பார்க்கிறார்கள் காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும்.தி.மு.க. என்ற தீய சக்திகளை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும்.மாநில அரசும் உரிய பாதுகாப்புடன் வீரர்கள்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மீண்டும் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!