தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சண்டை, சர்ச்சை என தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதில் இருந்தே கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கு சரியாக உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்யவில்லை. தவெக சார்பில் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், விஜயைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் ஓய்எம்சி மைதான கண்ணாடிகள் உடைக்கப்பட்டது என அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடக்கவுள்ள கூட்டத்தை எந்தவித சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்வதற்காக வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைமை முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது, இந்த கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தவெக முழு ஆதரவு..! திமுகவை சரமாரியாக சாடிய விஜய்..!
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் மாவட்ட செயலாளர்களை கிளை, ஒன்றியம், நகர பிரதிநிதிகள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதே விதி. ஆனால் பிற பதவிக்கானவர்களை தேர்வு செய்வதற்கு முன்னதாக, முன்னதாக மாவட்ட செயலாளர்களை நேரடியாக நியமித்துவிட்டார்கள். இந்த நியமனம் முறைப்படி செல்லாது எனக்கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் இந்த மாவட்ட செயலாளர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் கட்சியின் மற்றொரு விதிமுறையின் படி, பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்னும் 6 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஒருவேளை அவர்கள் நியமிக்கப்பட்டாலும், கட்சி விதிமுறைப்படி அவர்களுக்கு எப்படி 15 நாட்களுக்கு முன்னதாக அழைப்பு அனுப்பப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இல்லை உடனடியாக அழைப்பு அனுப்பினால் விதிமுறைகள் இடம் கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குழப்பங்களால் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற சந்தேகம் வலுத்துவருகிறது.
இதையும் படிங்க: கெஞ்சி ஆட்சிக்கு வந்த திமுக.. அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்.? திமுக அரசை விஜய் கிழி.!