தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு யாராவது பணம் வாங்கினால் பதவி பறிக்கப்படும் என நேரடியாக விஜய் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழக வெற்றிக் கழக விவகாரத்தில் விஜய் சொல்லும் பேச்சை புஸ்ஸி ஆனந்த் கேட்பது இல்லை என அக்கட்சியின் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலான நிலையில், தற்போது பதவிக்காக வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆதங்கத்தைக் கொட்டிய வாட்ஸ் அப் மெசெஜ்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

விழுப்புரம் மாவட்டத் தலைவராக உள்ள குஷி மோகன் என்பவர் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்பதாக அம்மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் தொண்டர் ஒருவர் பதிவிட்டது வைரலாகி வருகிறது.தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 19 அணிகள் உள்ளன. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து வசூல் வேட்டை நடப்பதாகவும், இதனை தலைமையேற்று நடத்துவதே புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் புகார்கள் கிளம்பின.
இதையும் படிங்க: 117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா?
இந்த தகவல் வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் “பதவிக்காக பணம் கொடுப்பதோ, வாங்குவதொ தலைமைக்கு தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி உடனடியாக அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களை கட்சியில் இருந்து நீக்க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும்” தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பணம் வசூலிப்பதில் புஸ்ஸி ஆனந்த் தான் முக்கிய நபர் என குற்றச்சாட்டப்படும் நிலையில், அவரை விஜய் எப்படி சும்மா விட்டார் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழக அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் புஸ்ஸி ஆனந்திற்கு புகார் தெரிவிக்கலாம் என அவரது பர்சனல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மெசெஜில் கிளைக்கழகம், வார்டு, நகரம், பேரூராட்சி, மாவட்டம் ஆகிய பதவிகளைத் தவிர்த்து, அணிகளில் உள்ள பதவிகளுக்கு யாராவது பணம் கேட்டால் மட்டும் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அப்படியென்றால் அணிகள் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு பணம் வசூலிப்பது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு தெரிந்து தான் நடக்கிறதா? என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்காமல், அடிமட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் வரை பதவிக்கு பணம் வாங்குவது தொண்டர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

இந்த விவகாரத்தில் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என தவெக தொண்டர்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜயிடம் இருந்து அதிரடி உத்தரவு பறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவிகளை நியமிக்க பணம் வாங்கினால் பதவி பறக்கப்படும் என விஜய் கடுமையான வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நிர்வாகிகள் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபடுவது புஸ்ஸி ஆனந்திற்கும் தெரியும் என்ற தகவல் வெளியான நிலையில், விஜய் கொடுத்த எச்சரிக்கை புஸ்ஸி ஆனந்திற்கும் சேர்த்தே என்கின்றனர் தவெக தொண்டர்கள்.

விஜயின் இந்த எச்சரிக்கை புஸ்ஸி ஆனந்திற்கு கடும் நெருக்கடியாக மாறியுள்ளது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட தலைவர்கள் பதவிகள் இறுதியாகியிருக்கும் நிலையில், பனையூர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு 20 பேரைக் கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கும் விஜய் இதே வார்னிங்கை கொடுத்த பிறகே அறிவிப்பை வெளியிடுவார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வண்டிக்கு வாடகை தரக்கூட காசில்லையா?... உழைச்ச பணத்த கொடுக்கலன்னா ஆடியோ வெளியாகும் - தவெக தலைவர் விஜய்க்கு அடுத்த சிக்கல்!