தி.மு.க எதிர்ப்பை வழக்கத்தைவிட கூர்மைப்படுத்தி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். இவரது அண்மைகால நடவடிக்கைகள் தி.மு.க கூட்டணியில் தொடர்வாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
''தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஆளும் கட்சியினர் பதில் அளித்து வருகின்றனர். அப்போது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க: அதிகப்பிரசிங்கித் தனம்... வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!
ஆனால், இந்த முறையும் திமுக கூட்டணியில் அதுவும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பண்ருட்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வாக சட்டப்பேரவையில் அறியப்படும் வேல்முருகன் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு எப்போதும் போல அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக கண்டித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்தின் போது வேல்முருகன் ஆவேசமாகி பேரவையில் ஆளுநர் செல்லும் பாதையில் சபாநாயகரை நோக்கி நடந்துவந்து கோஷமிட்டதாவும், அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே நடத்துகின்றன. ஆனால், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை? என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
வேல்முருகன் செய்கையை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார். அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரபரப்பு குற்றசாட்டை வைத்தார். இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் யார் மீதும் இப்படி புகார் அளித்ததே இல்லை. இனி இதுபோல நடந்துகொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று மற்ற எம்.எல்.ஏ-க்கள் நடந்து கொண்டாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்து இருக்கிறார்.

நேற்றும் சட்டப்பேரவையில் தன்னை பேசவிடாமல் தடுத்ததாக வருந்தி இருந்தார் வேல்முருகன், ''ஒரு 50 ஆண்டு காலம் பொது வாழ்வில் இருக்கிற, சட்டப்பேரவையில் 45 ஆண்டு காலம் பணியாற்றுகின்ற அண்ணன் துரைமுருகன் அடிக்கடி நான் பேசுகின்றபோது, அந்த கருத்தை தடுக்கிறார். நான் பேசிய அதே கருத்தை, பிறகு சில சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். ஒட்டுமொத்த அமைச்சர்கள், அவை முன்னவர், அவர்களை மட்டும் அனுமதிக்கிறார்கள்.
அதேபோல் ஜாகிர் உசேன், ஜாபர் அலி குடும்பத்திற்கு நிதி வழங்க அரசு முன்வர வேண்டும். அரசு வேலை வழங்க முன்வர வேண்டும் என்ற கருத்தைக்கூட முழுமையாக என்னை சொல்ல விடவில்லை. சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களையோ, சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்கிற விஷயங்களையோ நான் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் கூட்டணியில் இருக்கிறேன். கூட்டணி கட்சித் தலைவராக இருக்கிற வேல்முருகன், நான் சார்ந்திருக்கிற அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் துறையில் இருக்கிற காவல்துறைக்கு யார் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ? அதை எப்படி சரி செய்யலாம் என்கிற ஒரு நல்ல ஆலோசனையைக்கூட ஒரு மூன்று, நான்கு நிமிடம் ஒதுக்கி, கவனயீர்ப்பு கொடுத்த எனக்கு அனுமதி மறுப்பது என்பது ஏற்புடையது அல்ல.

நான் ஒரு சீனியர் சட்டப்பேரவை உறுப்பினர். ஆக, அரசுக்கு நல்ல ஆலோசனைகளை சொல்ல முற்படுகின்றபோது, முழுவதுமாக என்னை பேச விடாமல் தடுப்பது, அவை முன்னவர் எழுந்து அவருக்கே உரிய நகைச்சுவை பணியில் அதை மடைமாற்றம் செய்வது ஜனநாயகம் மாண்பு அல்ல. அவையில் மூத்தவர் துரைமுருகன். அவரை நான் மதிக்கிறேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் அவரிடம் இருந்துதான் நான் அரசியலை பயின்று இருக்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இது போன்று குறுக்கிடுகின்றபோது முதலமைச்சர்கள் தலையிட்டு, வேல்முருகன் என்ன முழுசா பேசுகிறார்? அனுமதியுங்கள். சட்டப்பேரவையின் பதிவேடுகளில் இடம் பெற முடியாத வார்த்தைகளை நீக்குங்கள் என்று என சொல்ல முதலமைச்சர் முன் வர வேண்டும்'' எனப் பொங்கி இருந்தார்.
டிசம்பர் -9ம் தேதி சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் எம்.ஏல்.ஏ., வேல்முருகன் பேச்சில் சிலவற்றை, அவைத் தலைவர் அப்பாவு அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.இதனால் வேல்முருகனுக்கும், அவைத் தலைவர் அப்பாவு- அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த ஜனவரி 10ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய வேல்முருகன், "அரசிடம் உரிமையோடு நான் முன்வைக்கும் கோரிக்கைகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு முறையும் முதல்வர் கார் வரை சென்று, என் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர்களிடம் கூறுங்கள் என்கிறேன். ஆனால் என் கோரிக்கையை அமைச்சர்கள் யாருமே நிறைவேற்றுவதில்லை. என்ன பாவம் செய்தேன் நான். திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன் தம்பி திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீ தான் கொடுக்கிறார்கள், கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை'' என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நீங்கள் பேரவைக்குள் பேசும்போது கூட்டணியில் இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால், பேரவைக்கு வெளியில் பேசும்போது எங்களுக்கு எதிராக பேசுகிறீர்கள். நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா.? வேல்முருகன் தெளிவாக சொல்ல வேண்டும்" என்றார்.

அதற்கு பதிலளித்த வேல்முருகன்,"சென்சிட்டிவாக நான் பேசும்போது, நகைச்சுவையாக பேசி எனது கோரிக்கைளின் வீரியத்தை துரைமுருகன் குறைத்து விடுகிறார். எதிரணியில் இருந்தபோது கூட கருணாநிதி என் கோரிக்கையை நிறைவேற்றினார். தற்போது கூட்டணியில் இருந்து பயனில்லை. நானும் ஒரு காலத்தில் திமுக -காரன்தான், பாமக உருவான பிறகுதான் திமுகவில் இருந்து விலகி பாமகவிற்கு சென்றேன். அதற்கு முன் திமுக பேச்சாளனாக இருந்தேன். அந்த உரிமையில் கேட்கிறேன்'' என்றார்.
''கூட்டணி வைக்கும்போது திமுக தலைவர்கள் எனக்குப் பேசுகிறார்கள். வெற்றி பெற்று அமைச்சராகிவிட்ட பிறகு அமைச்சர் பேச மாட்டார். அவர் வீட்டு உதவியாளர்கள் பேசுகிறார்கள். ஏன் அமைச்சர் பேச மாட்டாரா? எங்கிருந்து வருகிறது அதிகார போதை?” என ஒரு கட்டத்தில் தி.மு.க-வை போட்டுத்தாக்கிவிட்டார்.
கூட்டணியில் இருந்தும் தொடர்ந்து திமுகவுடன் மல்லுக்கட்டி வரும் வேல்முருகன் நிலை குறித்து மூத்த அரசியல் பார்வையாளர்கள் நம்மிடம், ''கூட்டணிக் கட்சி தலைவர் என்றாலும் தனது எந்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்ப்பதில்லை என்ற வருத்தம் வேல்முருகனிடம் இருக்கிறது. செய்து தருவதாக சொல்லிவிட்டு அலட்சியப்படுத்தப்படுவதாக வருத்ததில் இருக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கி தொகுதி பிரச்னை வரை நமது வாய்ஸ் எடுபடவில்லை.

வன்னியர்களின் வாக்குகளை தி.மு.க-வுக்காக மடைமாற்றினாலும், வன்னியர்களுக்கான எந்த கோரிக்கையையும் தி.மு.க கண்டுகொள்வதில்லை என கொதிநிலையில் இருக்கும் அவர், கூட்டணிக் கணக்குகளுக்காக கள்ள மெளனம் சாதிக்க முடியாது. உரிமை கேட்டால் கூட்டணி உடையுமென்றால் அந்த கூட்டணியே வேண்டாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.
இப்படி எந்த பிரயோஜனமும் இல்லையென்றால் எதற்கு இந்த பதவி யோசிக்கிறார். வேல்முருகனின் இந்த துணிச்சலுக்கு அ.தி.மு.க-வின் தொடர் அழைப்புகளும் ஓர் காரணம். தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க ஆட்சிமீதான கடும் அதிருப்தியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக்கு வந்தால் தமிழ்தேசிய, வன்னியர் சமூக வாக்குகளும் கைக்கொடுக்கும் எனக் கருதுகிறது அதிமுக. நாடாளுமன்ற தேர்தல் முதலே அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்திருந்த அதிமுக-வுக்கு அவர் சட்டமன்ற தேர்தலுக்கு வந்துசேருவார் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது’ என்கிறார்கள்.
இதையும் படிங்க: பாஜக கலவர ஆட்சியின் தொடர்ச்சி தான் அவுரங்கசிப் கல்லறை இடிப்பு.. வேல்முருகன் தாக்கு..!