ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு அதிமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் திமுகவினர், ஆதரவு பத்திரிகையாளர்கள், திமுக ஆதரவாளர்கள், திமுக ஐடிவிங், நடுநிலை பத்திரிகையாளர்கள், பாஜகவை விரும்பாதவர்கள், பொதுவான பத்திரிகையாளர்கள் என ஒரு பெரும் கூட்டமே அதிமுகவுக்கு எதிராக கம்பு சுத்தி வருவதை பார்க்கலாம்.
விமர்சனங்கள் அனைத்தும் கடுமையாக அதிமுக மீது வைக்கப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவின் ஐடி விங்கும், அதிமுகவின் தலைமையும் திணறி வந்ததை கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து வந்தோம். இது ஒரு புறம் இருக்க பாஜகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கூட்டணி கட்சியான அதிமுகவை விமர்சித்த போது அதற்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் நிலையில் அதிமுக இருந்து வந்தது. இது அல்லாமல் அதிமுகவுக்கு எதிராக திமுக ஆதரவு பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் வைத்த குற்றச்சாட்டுகள், பொய்யான பதிவுகளுக்கு எதிராகவும் அதிமுக பதிலளிக்க முடியாமல் திணறி வந்தது.

அதிமுக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் அதன் மீது வைக்கப்பட்டது. காரணம் திமுகவின் பலம் வாய்ந்த ஐடி விங்கின், மற்ற ஊடகங்களின் செயல்பாடுகளை எதிர்த்து அரசியல் செய்வதில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு இருந்து வந்தது. இது போன்ற நேரத்தில் தான் திடீரென அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் கோவை சத்யன், கல்யாணசுந்தரம், சிடிஆர், சிங்கை ராமச்சந்திரன், சசிரேகா உள்ளிட்ட பலர் வேக வேகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பல கருத்துக்களை எடுத்து வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
இதையும் படிங்க: 2021-ல் திட்டமிடாமல் கோட்டைவிட்டாரா?... டிடிவியை இணைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தகுதியில்லாத தலைவரா எடப்பாடி பழனிசாமி? ...
குறிப்பாக கோவை சத்யனின் பேட்டி வீடியோக்கள், அவருடைய பேட்டிகளில் அவர் பங்கேற்கும் விதமும், வாதங்களை எடுத்து வைக்கும் விதமும் மாற்றுக் கட்சிகளாலும் பாராட்டப்பட்டது. பாயிண்ட்களை அமைதியாக, ஆதாரத்துடன் அடுக்கடுக்காக எடுத்து வைப்பதில் கோவை சத்யன் வல்லவர். கோவை சத்யன் அதிமுக சார்பாக செயல்பட்டாலும் அதிமுக ஐடிவிங்கை நடத்துவது ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன் முக்கிய நிர்வாகிகள் என்பது பலரும் அறிந்ததே. சிங்கை ராமச்சந்திரனின் செயல்பாடுகள் திமுகவின் ஐடி விங்கை எதிர்க்கும் அளவிற்கு வேகம் இல்லை என்கிற குற்றச்சாட்டு பலராலும் வைக்கப்பட்டது.

திமுகவின், பாஜகவின் ஐடி விங்குக்கு இணையாக அதிமுக ஐடி விங் சரியான வேகத்தில் இயங்கவில்லை, கூடுதல் வேகம் எடுக்க வேண்டும், வருகின்ற தேர்தலுக்கான களத்தில் அதிமுக ஐடிவிங் இதுபோன்று செயல்பட்டால் அது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிற வாதமும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை சத்யன் பரபரப்பாக ஊடகவாதங்களில் பங்கேற்பதும், அவருடைய சமூகவலைதளத்தில் அவருடைய செயல்பாடும் அனைவராலும் வரவேற்கப்பட்ட நிலையில் திடீரென சிங்கை ராமச்சந்திரன் மாணவர் அணிக்கு பொறுப்பாளராகவும் ஐடிவிங்குக்கு சிங்கை இருந்த இடத்தில் கோவை சத்யனும் நியமிக்கப்பட்டனர்.
சிங்கை ராமச்சந்திரன் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர். கோவை சத்யன் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுடன் நெருக்கம் காட்டி வருபவர். எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். ஆனாலும் கோவை சத்யன் நியமிக்கப்பட்டது கட்சிக்குள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சரியான ஒருவரை சரியான நேரத்தில் போட்டுள்ளார்கள் என்று ஒருபுறமும், ஏன் இந்த திடீர் மாற்றம் கோவை சத்யன் ஐடிவிங் நிர்வாகியாக பொறுப்பேற்பதன் மூலம் வேகம் எடுக்குமா? என்றெல்லாம் கேள்விகள் சிலரிடம் இருந்தது.
அதே நேரம் கோவை சத்யன் ஊடகங்களில் வைக்கும் வலுவான வாதங்கள் ஐடி விங்குக்கு அவர் தலைமை பொறுப்புக்கு வருவதன் மூலம் மேலும் வலுப்பெறக்கூடும், தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை எடுத்த சரியான முடிவு என்று கூறப்பட்டது. இந்த நேரத்தில் தான் கோவை சத்யன் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டதும், ஐடி விங் தளத்தில் தன்னையும், எடப்பாடி பழனிசாமியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதும், தலைமையை மீறி தன்னை மட்டுமே முன்னிலை படுத்தி போஸ்டர் அடிப்பது, போஸ்டரில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது என்ற போக்கு அதிகரித்து வந்தது கட்சித்தலைமைக்கும், எஸ்.பி.வேலுமணி போன்றோர் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனிடம் நெருக்கம் காட்டி வரும் கோவை சத்யன் அதன் மூலம் கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தி அதிகாரம் மிக்கவராக மாறி வருகிறார் என்றும், அதன் மூலம் மற்ற தலைவர்களை மதிக்காமல் இருக்கிறார் இது நல்லதல்ல என்றும் தலைமைக்கு புகார் சென்றுள்ளது. இது எஸ்.பி.வேலுமணியின் மூலமாகவும் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
கோவை சத்யனின் வளர்ச்சி பொறுக்காத சிலர் கோவை சத்யன் கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தி விட்டால் மீறி சென்று விடுவார் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். அவர் அவருடைய பொறுப்புணர்ந்து செயல்படுகிறார். சிங்கை ராமச்சந்திரன் கேட்டதால் தான் அவரை மாற்றி அவர் இடத்துக்கு கோவை சத்யன் கொண்டுவரப்பட்டார், இதில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை என்று ஐடி விங் நிர்வாகி தரப்பில் கூறுகின்றனர்.
இதனிடையே கோவை சத்யனின் செயல்பாடுகள் எஸ்.பி.வேலுமணிக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் எடப்பாடியை மட்டுமே மதிப்பதாகவும் எஸ்.பி வேலுமணிக்கும் அவருக்குமே கூட சில உரசல்கள் வந்ததாகவும் இதுபோன்ற புகார்கள் அனைத்தும் கட்சி தலைமையிடம் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதை அடுத்து கட்சி தலைமை அவரை கூப்பிட்டு கண்டித்ததாகவும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படாமல் முறையாக அனைத்து தலைவர்களை மதித்து இயங்க வேண்டும் என்ற என்று கட்சி தலைமையால் வலியுறுத்தப்பட்டதாகும் கூறப்படுகிறது.

இது கோவை சத்தியனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இந்த வருத்தத்தால் தான் சில காலம் ஒதுங்கி இருக்க விரும்புவதாக அவர் திடீரென முடிவெடுத்துள்ளார். இதை அவர் ஒரு தனியார் youtube சேனலில் பேட்டியாக அளித்தது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. கோவை சத்யன் அந்த பேட்டியில் முழுவதும் நான் எடப்பாடிக்கு விசுவாசமாக இருப்பேன், தலைமை விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் கூறியதை கவனிக்கலாம் என்று அதிமுகவுக்குள் சிலர் கூறுகின்றனர்.

தன்னுடைய ஓய்வு மூலம் ஏதோ ஒரு மெசேஜை கோவை சத்யன் சொல்லி வருகிறார். அதிமுகவில் ஐடி வங்கியில் ஒரு புது மாற்றம் வந்தது என்று அனைவரும் சந்தோஷப்பட்ட நேரத்தில் மீண்டும் ஒரு பின்னடைவை சந்திக்கும் வகையில் கோவை சத்யன் ஒதுங்க உள்ளதாக தெரிவித்திருப்பது தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு நல்லதல்ல என்று மூத்த கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். என்ன ஆச்சு கோவை சக்யனுக்கு அவர் வாய் திறந்து சொன்னால்தான் உண்டு.
இதையும் படிங்க: இருந்தாலும் மறைந்தாலும்.... பகைவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்..