தமிழக அரசியலில் பிரகாசித்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அமைதியாக இருக்கிறார். தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் ஆதவ் அர்ஜூன் குழப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லாட்டரி மார்ட்டினின் மருமகன் என்ற அடையாளத்துடன் வந்தாலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்ட, படித்த, தமிழக அரசியலை மிகத் தெளிவாக அறிந்தவராக விளங்கி வரும் ஆதவ் அர்ஜுன் 2015 முதல் வியூக வகுப்பாளராக திமுகவில் செயல்பட்டு வந்தார். அவரது தனி திறமையும், அரசியலில் அவருக்கு இருக்கும் முன் சிந்தனையையும் கண்டு சபரீசன் அவரை திமுகவிற்கான தேர்தல் யுத்திகளை கையாளும் பொறுப்பில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் திமுகவின் வியூக வகுப்பாளராக மாறிய ஆதவ் அர்ஜுனா தேர்தல் வியூக வேட்பாளர் பிரசாந்த் கிஷோரை திமுகவிற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படும்படி அழைத்து வந்தார்.
அதற்கு முன் 2016 ஆம் ஆண்டு திமுகவுக்காக செயல்பட்ட வியூக வகுப்பாளர் சுனிலின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தேமுதிக கூட்டணிக்குள் வராமல் போனதும், மக்கள் நல கூட்டணி அமைந்ததை தடுக்க தவறியதும் திமுகவின் தோல்விக்கு பிரதான காரணமாக பேசப்பட்டது. இந்த நிலையில் மக்கள் நல கூட்டணி கட்சிகளை திமுகவுக்கு திருப்பி கொண்டு வரவும் திமுக அணியை பலப்படுத்தி பாஜக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு என்கிற பாதையில் நடை போட வைத்து அதற்கான வியூகங்களை வகுத்து 2019 தேர்தலில் மக்களவை தேர்தல் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி திமுக கூட்டணி போட்டியிட்டது. இதற்கான முழு பின்புலத்தில் இயங்கியது ஆதவ் அர்ஜூன் என்று சொல்லலாம்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினை அறிவிக்க வைத்ததும், தேர்தல் யுத்தியாக பார்க்கப்பட்டது. அதற்கு பலனும் கிடைத்தது. அதே நேரம் திமுக கூட்டணிக்குள் கூட்டணி கட்சிகளை குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் நிறுத்தும் வேலையையும் அர்ஜுன் செய்தார் என்றால் அது மிகையாகாது. இதனால் மிக அதிக எண்ணிக்கையில் எம்பி தொகுதிகளை திமுக வென்றதும் நடந்தது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா..? வார்த்தையில் வறுத்தெடுத்த வானதி..!
தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள், திமுக கூட்டணிகளை தக்க வைத்துக் கொள்வது, மீண்டும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கருணாநிதி காலத்திலேயே முடியாத அளவுக்கு இருந்த நிலையை மாற்றி, இடதுசாரிகளை 6 என்கிற எண்ணிக்கையில் அடக்கியதும், காங்கிரஸ் கட்சியை 25 தொகுதிகள் மட்டுமே என்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் இவர்களுடைய வெற்றி என்று சொல்லலாம். அதில் ஆதவ் அர்ஜுனனின் பங்கு பெரிதாக இருந்ததை காணலாம்.

2021 தேர்தலில் தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகித்தது, அதிலும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் செயல்பாடும் ஆதவ்வின் பங்கும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு சென்ற நிலையில், திமுகவுக்காக ஐபேக் செய்த வேலையை அதில் பணியாற்றிய உறுப்பினர்களை வைத்து பென் (PEN) என்ற அமைப்பை ஆதவ் அர்ஜுன் உருவாக்கி அதற்கு தலைமை வகித்தார். பென் (PEN) என்ற அமைப்பின் செயல்பாடுகள் திமுகவுக்குள் பெரிதாக இருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சபரீசனிடமிருந்து விலகி உதயநிதியுடன் இணைந்தார், அதுவும் சிறிது காலமே என்கிற நிலையில் முற்றிலுமாக இவர்கள் தொடர்பில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் செயல்பட்ட பொழுது திமுகவிற்கு மறைமுகமாக கட்சியில இணையாமல் வேலை செய்த ஆதவ் அர்ஜுன் முதல் முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் செயல்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எழுச்சி மாநாடு என்ற ஒன்றை நடத்திய ஆதவ், மது ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி விசிக கட்சியை திரும்பி பார்க்க வைத்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே ஆதவர்ஜுனுக்கு எதிர்ப்பு வந்தது. அவரது முன்னேற்றம் தங்களை பாதிக்கும் திமுகவை பகைத்து கொண்டு வந்த ஒருவர் தங்கள் கட்சியில் இருப்பது திமுகவின் தலைமைக்கு கோபம் வரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே இருந்த திமுக ஆதரவு தலைவர்களால் திருமாவளவனுக்கு சொல்லப்பட்டது. ஆனாலும் திருமாவளவன் ஆதவ்வுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி பெரும் வரவேற்பை பெற்றது.

கட்சியின் சுயமரியாதை, தொகுதிகள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, கூட்டணி அமைத்ததால் தான் திமுக வென்றது, தங்களுடைய தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் ஆகும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்று ஆதவ் அர்ஜுனின் கருத்துக்கு பலத்த வரவேற்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே அதிகரித்தது. மது ஒழிப்பு மாநாட்டில் ஆதவ் அர்ஜுனுக்கு திருமாவளனுக்கு இணையான கிடைத்த வரவேற்பு கட்சியின் மற்ற தலைவர்களுக்கு கடும் கோபத்தை கிளப்பியது. அவரை கட்சியில் இன்று வெளியேற்ற மற்ற தலைவர்கள் முயற்சி எடுத்தனர். கட்சிக்குள்ளேயே ஆதவ் அர்ஜுனுக்கு எதிராக கருத்துக்களை பேசத் தொடங்கினர்.

திமுக தலைமையையும் ஆதவ் அர்ஜுனை வெளியேற்ற நெருக்கடி கொடுத்தது. இந்த நிலையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா விஜய் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டிருந்தாலும் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்று திமுக தலைமையில் இருந்தும் கூட்டணி கட்சிக்குள் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. கடைசியில் திருமாவளவன் பின் வாங்கினார். இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுன் பேச்சு விஜய்யின் பேச்சை விட கடுமையாக இருந்தது. நேரடியாக உதயநிதி ஸ்டாலினையும், மன்னராட்சி மனநிலை என்று திமுகவின் செயல்பாட்டையும் அவர் விமர்சித்தது பெரும் பேசு பொருளானது. இதை அடுத்து திருமாவளவன் வேறு வழி இல்லாமல் அவருக்கு நோட்டீஸ் அளித்து ஆறு மாதம் சஸ்பெண்ட் எனும் முடிவை கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தின் பெயரில் எடுத்தார். பிறகு ஆதவ் அர்ஜுன் கொடுத்த தன்நிலை விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திருமாவளவன் அறிவிப்பு செய்த நிலையில் ஆதவ் அர்ஜூன் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆதவ் அர்ஜூன் இந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகிவிட்டார். பொதுவாக ஆதவ் அர்ஜூன் யார் என்று பத்திரிகையாளர்கள் கட்சியினரில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மட்டுமே அறிந்திருந்த நிலையில், அவரது பேட்டிகள் திமுகவுக்கு எதிரான அவர் வைத்த விமர்சனங்கள், தேர்தல் வெற்றிகள் குறித்த அவரது ஆழமான பார்வை பொதுமக்களிடையே மிகப் பிரபலமானது. குறுகிய காலத்தில் ஆதவ் அர்ஜுன் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அறிந்திட்ட நபராக மாறினார்.
இந்த வெளிச்சத்தை ஆதவ் அர்ஜுன் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவர் தாமதிக்காமல் உடனடியாக தனக்கான ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லிவரும் நிலையில், அவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் அவர் மதிப்பை குலைக்கும் வகையில் ஊடகங்கள் மூலம் பேட்டி எடுத்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தை செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.
பருவத்தே பயிர் செய் என்பார்கள் எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்ய தவறினால் பின்னர் அந்த வாய்ப்பு கிடைக்காது, இது ரஜினிகாந்துக்கு நடந்தது பலருக்கும் நடந்துள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆதவ் அர்ஜுன் முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர் தனியாக அமைப்பை தொடங்கி திமுகவுக்கு எதிரான கட்சியுடன் கூட்டணி வைப்பது, இரண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வது, மூன்று தவெகவில் தன்னை இணைத்துக் கொள்வது. இதில் ஆதவ் அர்ஜுன் தனியான அமைப்பை தொடங்கினால் அது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதும், அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் எந்த அளவுக்கு முயலும் என்பதும் கேள்விக்குறியே.
அதேபோன்று அதிமுகவில் ஆதவ் அர்ஜூன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பினால், வரவேற்பு இருந்தாலும் அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியில் பல தலைவர்கள் இருக்கும் நிலையில் ஆதவ்அர்ஜுன் அங்கு தன்னை வளர்த்துக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியே.. காரணம் திமுகவில் இதே அனுபவம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதிமுகவிலும் அதே அனுபவம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் தவெகவில் அர்ஜுன் தன்னை இணைத்துக் கொண்டால் அவருக்கான வளர்ச்சியும் இருக்கும் கட்சிக்கான வளர்ச்சியும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காரணம் தவெகவில் விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் இல்லை புஸ்ஸி ஆனந்த் தமிழக அரசியலில் ஆளுமை செலுத்துகின்ற அளவுக்கு அரசியல் அறிவு உள்ளவராக இல்லை, மற்ற நிர்வாகிகளுக்கும் அனுபவ அறிவு அந்த அளவுக்கு இல்லை, ஆதவ் அர்ஜுன் தவெகவில் இணைவதன் மூலம் திமுகவில் அவரது அனுபவ அறிவு தவெகவுக்கு பயன்படும் , ஆதவ் அர்ஜுனும் தனித்துவ தலைவராக உயர வாய்ப்புள்ளது, ஆகவே உரிய நேரத்தில் உரிய முடிவை ஆதவ் அர்ஜுன் எடுக்க வேண்டும். காதல் கூட உரிய நேரத்தில் சொல்லாவிட்டால் கை நழுவி போகும், கட்சி அரசியலும் அப்படித்தான் ஆதவ் உரிய முடிவெடுப்பாரா? இல்லை அதே குழப்பத்தில் நீடிப்பாரா? இதுவே இப்போது ஆதவ் முன் உள்ள கேள்வி.
இதையும் படிங்க: கே.டி.ராகவன் விவகாரமும் இதுவும் ஒன்றா? ஜோதிமணி கவனமாக பேசணும்… குஷ்பூ ஆவேசம்...