"இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது” என்று திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக வியூகம் வகுத்து வருகிறது. இந்தச் சூழலில் அதிமுகவின் இந்தப் புறக்கணிப்பு அறிவிப்பு, திமுக எதிர்பார்க்கவில்லை. அதிமுகவின் முடிவை விமர்சித்து திமுக மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான எ.வ. வேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார். இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது.
இதையும் படிங்க: என்னங்க எடப்பாடியை ஸ்டாலின் இப்படி வசமா மாட்டிவிட்டாரு...! சட்டப்பேரவையில் நடந்த தரமான சம்பவம்!

2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் பழனிசாமி.
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ‘11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலிபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா?" என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக...