5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றும் என நினைக்கும் வேளையில் ராஜ்கோட்டில் நடந்த 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரை உயிர்பித்துள்ளது. இப்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கறது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும்.
புனேயில் இன்று இரவு நடக்கும் இந்த போட்டியில் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணியும், தொடரை நெருக்கமாகக் கொண்டு செல்ல இங்கிலாந்து அணியும் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்தின் வேகப்பந்து ஆயுதம்
இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தே வீரர்கள் களமிறக்கப்படுகிறார்கள். ஆடுகளம் எவ்வாறாக இருந்தாலும் ஆர்ச்சர், மார்க் உட், பிரைடன் கார்ஸ், ஓவர்டன் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசுகிறார்கள். இந்திய வீரர்களின் பலவீனத்தை அறிந்து, ஹோம் ஓர்க் செய்து திட்டமிட்டு செயல்படுவதால், விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடிகிறது. ஆதலால், இங்கிலாந்து அணியினருக்கு ஆடுகளம் ஒரு பொருட்டாக அமையவில்லை. அதில் ரஷித்தின் சுழற்பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றிக்கு கூடுதலாக உதவி செய்கிறது. கடந்த 3 போட்டிகளிலும் ரஷித் பெரிதாக விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும், அவரின் எக்கானமி ரேட் 3 முதல் 4 ரன்களுக்கு மேல் செல்லவில்லை.

இந்திய அணியைப் பொருத்தவரை அர்ஷ்தீப் கடந்த 2 போட்டிகளுக்கு கை கொடுத்த நிலையில் கடந்த ஆட்டத்தில் ஷமி களமிறங்கினார். ஷமியின் இயல்பான பந்துவீச்சு இருந்தாலும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. இந்திய அணி வேகப்பந்துவீச்சை நம்பி களமிறங்குவதைவிட சுழற்பந்துவீச்சாளர்கள் எனும் காய்களையே நம்புகிறது.
குறிப்பாக புதிரான பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னாய், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா என 5 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் வருண் பந்துவீச்சை எவ்வாறு புரிந்து கொள்வது என இங்கிலாந்து பேட்டர்களுக்குப் புரியவில்லை. வருண் பந்துவீச்சை உன்னிப்பாக கவனித்து ஆடுவதற்குள் பேட்டர்கள் விக்கெட்டை இழந்துவிடும் நிலைதான் இருக்கிறது. கடந்த 3 போட்டிகளிலும் வருணின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்னம். அக்ஸர், பிஸ்னோய் சிறப்பாகப் பந்துவீசினாலும் ரன்களை விடுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் பிஸ்னோய் ரன்களை வாரிக் கொடுத்தார். இந்திய அணி சுழற்பந்துவீச்சு எனும் ஆயுதத்தை நம்பியே களமிறங்குகிறது.
இதையும் படிங்க: சொதப்பிய இந்திய பேட்டர்கள்! வெற்றியுடன் டி20 தொடரை உயிர்பித்தது இங்கிலாந்து
பேட்டிங்கைப் பொருத்தவரை இரு அணிகளிலும் முக்கிய பேட்டர்கள் பெரிதாக இன்னும் ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணியைப் பொருத்தவரை சஞ்சு சாம்ஸன் கடந்த 3 ஆட்டங்களிலும் ஒரே மாதிரியாக, ஆர்ச்சர் பந்தவீச்சில்தான் ஆட்டமிழந்துள்ளார். பந்தின் வேகத்துக்கு ஏற்ப சாம்ஸனின் பேட்டின் வேகம் இல்லாததால் நினைத்த ஷாட்களை அவரால் விளையாட முடியவில்லை.
இதேபோன்று சாம்ஸன் மோசான ஃபார்மில் ஆடினால் தொடக்க வரிசைபேட்டிங்கை இழக்க நேரிடும், இந்த இடத்துக்கு ஜெய்ஸ்வால், அபிஷேக், சுப்மான் கில் என பலர் போட்டியில் இருப்பதால் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு சாம்ஸன் அணியில் நீடிக்க அவரின் பேட்டிங்கில் நிலைத்தன்மை அவசியம்.
அதேபோல கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக ரன்களைச் சேர்க்கவில்லை. சூர்யகுமார் பந்தை கணித்து ஆடுவதிலும், அனைத்து பந்திலும் பெரிய ஷாட்களுக்கு முயற்சிப்பதுமே அவருக்கு ஆபத்தாக முடிகிறது. சூர்யகுமார் தலைமையில் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழக்கவில்லை, இதை மனதில் வைத்து இரு ஆட்டங்களிலும் பொறுப்பாக பேட் செய்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும்.

ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், திலக்வர்மா நடுவரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள். கடந்த போட்டியில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் ஆட்டம் திரும்பியிருக்கம்.
காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளிலும் இடம் பெறாத ரிங்கு சிங் இந்த ஆட்டத்தில் பங்கேற்பார் என துணைப் பயிற்சியாளர் ரியான் டென் தெரிவித்துள்ளார். ரிங்கு சிங் அணிக்குள் வரும்பட்சத்தில் நடுவரிசை பலம்பெறும். ஹர்திக் பாண்டியா, திலக்வர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல் என பேட்டிங் வரிசை ஸ்திரமாக அமையும்.
ரிங்கு சிங் களமிறங்கும் பட்சத்தில் துருவ் ஜீரெல் நீக்கப்படுவார். அதேபோல வாஷிங்டன் சுந்தரை அமரவைத்து அவருக்குப் பதிலாக ராமன்தீப் சிங் அல்லது ஷிவம் துபே இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாம் எனத் தெரிகிறது.
ஆதலால் பேட்டிங்கைப் பொருத்தவரை பலவிதமான தேர்வுகள் , வீரர்கள் இருந்தாலும், அவர்கள் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து ஆட்டத்தின் போக்கு நகரும்.
இங்கிலாந்து அணியிலும் பேட்டிங் பிரச்சினை இருக்கிறது. கரிபியன் மண்ணில் சதம் அடித்த பில் சால்ட் இந்தியத் தொடரில் திணறுகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் வெளுத்துவாங்கிய சால்ட் இந்ததொடரில் சுணங்குவது வியப்பாக இருக்கிறது.
ஹேரி ப்ரூக், ஸ்மித், பெத்தெல் இதுவரை பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. இந்திய சுழற்பந்துவீச்சு அதிலும் வருண் பந்துவீச்சைக் கண்டு நடுங்கிறார்கள். கேப்டன் பட்லர் ஒரு போட்டியில் அரைசதம் அடித்தநிலையில் அடுத்த 2 ஆட்டங்களிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. லிவிங்ஸ்டன் கடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு கேமியோஆடியதால் ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இங்கிலாந்து நிலை பரிதாபம்தான் மகாராஷ்டிராவின் புனே ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. கருப்பு மண்ணால் விக்கெட் அமைந்திருப்பதால், தொடக்கத்தில் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும் பின்னர் சழற்பந்துவீச்சுக்கு முற்றிலும் ஏதுவாக மாறிவிடும்.

இந்த ஆடுகளத்தில் 4 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியும், 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியும் வென்றுள்ளன. ஆடுகளத்தின் தன்மையை உடனடியாக கண்டுபிடிப்பது கடினம் என்பதால் போட்டியில் ஸ்வரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
இதுவரை 64 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக நடந்துள்ளன இதில் 35 முறை முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளன. இந்த ஆடுகளத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவிருக்கும். ஆதலால் சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை எந்த அணி வலுவாகக் கையாள்கிறதோ அந்த அணி வெற்றிக்கு முன்னெடுக்கும்.
இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரே 167 ரன்கள்தான். இந்த ரன்களை இங்கு சேஸ் செய்வதே கடினமாகும். அந்த அளவுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் வலுவாக இருந்தால் எளிதாக டிபெண்ட் செய்யலாம்.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதுதான் சிறந்த முடிவாகும். ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுத்துவிட்டால், டிபெண்ட் செய்ய முடியும். ஆதலால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும், இரவுப்பனிப்பொழிவும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: ஹீரோவான திலக் வர்மா! கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி: வெற்றியை கோட்டைவிட்ட இங்கிலாந்து