இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?
இந்தியாவில் பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாட உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர் அனைத்திலும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின்போது பும்ராவுக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டு பந்துவீசாமல் பாதியிலேயே வெளியேறினார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனையும் செய்பட்டது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசவில்லை. பும்ரா பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியதையடுத்து, சிட்னி டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை 10 ஆண்டுகளுக்குப்பின் பறிகொடுத்தது.
இந்நிலையில் பும்ராவுக்கு ஏற்பட்ட முதுகு தசைப்பிடிப்பு தீவிரமாக இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் பங்கேற்கமாட்டார். பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராவில் பும்ரா விளையாடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்னமாக விளங்கிய பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் மட்டும் பும்ரா 150 ஓவர்களை வீசியுள்ளார். இந்தத் தொடரில் பும்ராவை நம்பியே இந்திய அணி பெரும்பாலும் விளையாடியது, இதனால் பும்ராவுக்கும் பணிச்சுமை அதிகரித்தது என்பதை உணர்ந்த பிசிசிஐ நிர்வாகம் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவுசெய்துள்ளது. பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகு தசைப்பிடிப்பும் எவ்வாறு ஏற்பட்டது, வலி எங்கு இருக்கிறது என்பதையும் மருத்துவர்களால் சரியாக கண்டறிய முடியவில்லை. இதனால், முறையான சிகிச்சை பும்ராவுக்கு தேவைப்படுகிறது. அதனால் பும்ராவுக்கு நீண்ட ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு இந்த மாதம்(ஜனவரி) பயணம் செய்யும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடர், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடரிலிருந்து பும்ரா முழுமையாக விலகுவார், விளையாடமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் கிரேட்-1 பிரிவாக இருந்தால் அது சரியாக குறைந்தபட்சம் 2 முதல் 3 வாரங்கள் ஆகலாம் அதுவரை அவர் ஓய்வில் இருப்பார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 20ம் தேதி துபாயில் தொடங்குகிறது. அதுவரை பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அந்தத் தொடரில் இந்திய அணியில் பும்ரா விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 47 ஆண்டுகால சாதனையை முறிடியத்த பும்ரா... ஆஸி. எதிராக அதிக விக்கெட்டுகள் குவித்து சாதனை..
ஒருவேளை காயத்தின் அளவு கிரேடு-2 பிரிவாக இருந்தால் 6 வாரங்கள் வரையிலும், கிரேடு-3 காயமாக இருந்தால் 3 மாதங்கள்வரை குணமடைய ஓய்வு எடுக்க நேரிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பும்ராவுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்கள் இன்னும் முழுமையான அறிக்கையை பிசிசிஐ அமைப்பிடம் வழங்கவில்லை. அந்த அறிக்கைக்குப் பின்புதான் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் கிரேடு-1, அல்லது கிரேடு-2 அல்லது கிரேடு-3 என்பது தெரியவரும். ஒருவேளை கிரேடு-1 பிரிவாக இருந்தால், பும்ராவின் உடற்பரிசோதனை, உடற்தகுதி ஆகியவற்றைப் பொருத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி 2 போட்டிகளில் பும்ரா விளையாடலாம்.
வரும் 22ம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட பும்ரா.. கம்மென்றாகிய கான்ஸ்டஸ்..