×
 

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா, ரத்தாகுமா? காரணம் என்ன?

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் ரத்தாகும் சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் 30 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் போட்டித்தொடர் நடத்தப்படும் நிலையில் இன்னும் அந்நாட்டில் மைதானங்கள், அரங்குகள் தயாராகவில்லை. இன்னும் 5 வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில் அதற்குள் பணிகளை முடித்துவிடுமா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானில் ஐசிசி நடத்தும் சாம்பியஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணி மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்த ஐசிசி முடிவு செய்து, ஹைபிரிட் மாடலை அறிவித்தது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடக்கும் கராச்சி தேசிய மைதானம், லாகூர் கடாபி அரங்கு,  ராவல்பிண்டி மைதானம் ஆகியவற்றை பிப்ரவரிமுதல் வாரத்திலேயே ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்படைக்க வேண்டும். 


ஆனால், கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் உள்ள மைதானங்களில் கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன, ரசிகர்கள் அமரும் இருக்கைகள் அமைக்கப்படவில்லை, மின்ஒளி விளக்குகள் சீரமைக்கப்படவில்லை, பிட்ச் அமைப்பு, வீரர்களுக்கான ஓய்வறைகள் அமைக்கப்படவில்லை, மைதானங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பணிகளை முடித்துவிடுமா என்பது ஐசிசிக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் ஐசிசி சார்பில் ஒரு குழுவினர் பாகிஸ்தான் சென்று அனைத்து அரங்குகள், மைதானங்கள் நிலையை பார்வையிட உள்ளனர். அந்த குழுவினர் அறிக்கை திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுவது சந்தேகம்தான் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி கெடு விதித்திருந்தது ஆனால் முடிக்கவில்லை.இதையடுத்து பிப்ரவரி 12ம் தேதிக்குள் 3 நகரங்களில் இருக்கும் மைதானங்களையும் ஐசிசியிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் பாதுகாப்பின்மை, வசதியின்மை, இருநாட்டு அரசியல் உறவு ஆகியவற்றை காரணம் காட்டி இந்தியா மோதும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டுவிட்டன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது 3 நகரங்களில் உள்ள மைதானங்களும் இன்னும் தயாராகாமல் இருப்பது மேலும் நெருக்கடியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் நிலவும் காலநிலை, கடும் பனி கட்டிடப்பணிகளை துரிதரமாக முடிக்காமல் தாமதப்படுத்துகிறது, இருப்பினும் பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். கடாபி மைதானத்தின் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி நேரில் பார்வையிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதையடுத்துதான் ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடைசியாக 1996 உலகக் கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது, அதன்பின் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் ஐசிசி நடத்தும் எந்தத் தொடரையும் நடத்தும் சூழலை உருவாக்க முடியவில்லை.
பாகிஸ்தானில் 3 மைதானங்களிலும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடுத்த வாரத்தில் பணிகள் எப்போது முடிய வாய்ப்புள்ளது குறித்து தெளிவான நிலை தெரிந்துவிடும். அதன்பின் ஐசிசி உறுதியான முடிவு எடுக்கும் நிலை ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி


ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் மைதானங்களை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இம்மாதம் 25ம் தேதிக்குள் அரங்குகளின் பணிகள் முடிந்துவிடும். லாகூர் கடாபி அரங்கு இம்மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என நம்புகிறோம். ராவல்பிண்டி அரங்கிலும் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளோம் அதுவும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். 
தினசரி 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஐசிசி வழங்கியுள்ள காலக்கெடுவுக்குள் மைதானங்களை தயார் செய்து ஐசிசியிடம் வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share