9-வது சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா தான் பங்கேற்ற எல்லா லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோன்று பி பிரிவில் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் இன்று முதலாவது அரையிறுதியில் மோதியது.

துபையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ச்சியாக 14 முறை ரோஹித் ஷர்மா டாஸில் தோல்வி அடைந்து புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட், கூப்பர் கனோலி களமிறங்கினர். போட்டியின் மூன்றாவது ஓவரில் முகமது ஷமி பந்துவீச்சில் கூப்பர் கனோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ட்ராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று ஆடினர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லுமா..? தென் ஆப்ரிக்கா முன் இருக்கும் வாய்ப்பு என்ன..?

இந்த ஜோடியை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பிரித்தார் 9-வது ஓவரை அவர் வீசியபோது, அடித்து ஆட முயன்ற ட்ராவிஸ் ஹெட், சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஸ்மித்துடன், லபுசேசன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பொறுப்புடன் விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது. 23-வது ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்த லபுசேசனை, எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா. அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீசையும் 11 ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். தனது அரைசதத்தை நிறைவு செய்த ஸ்மித், 73 ரன்கள் குவித்து முகமது ஷமி பந்தில் க்ளீன்போல்டாகி அவுட்டானார்.

பின்னர் வந்த மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், பென் ட்வார்சிஸ் 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியை மிரட்டி வந்த அலெக்ஸ் கேரி, 48-வது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவரை ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்கச் செய்தார். கடைசிகட்டத்தில் ஆடம் ஜம்பாவும், நாதன் எல்லியசும் ரன் எடுக்கப் போராடினர். 10 ரன்கள் எடுத்த நாதனை, ஷமி அவுட்டாக்கினார். ஆடம் ஜாம்பாவை ஹர்திக் பாண்ட்யா, 7 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கினார். கடைசியாக களமிறங்கிய தன்வீர் சங்கா ஒரே ரன்னுடன் களத்தில் நின்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி 265 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும். துபை மைதானத்தில் தொடர்ச்சியாக ஆடிவருவதால் இந்திய அணிக்கு சாதமாகாவே போட்டியின் முடிவு இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆப்கான் அணியை அந்த விஷயத்தில் யாராலும் வெல்ல முடியாது... ரகசியம் உடைத்த ஜடேஜா..!