2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக ஏய்டன் மார்க்கர்ம் மற்றும் நிக்கோலோஸ் பூரான் களமிறங்கினர். ஏய்டன் மார்க்கர்ம் 6 ரன்களிலும் பூரான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்களை 4 ஓவர் முடிவதற்குள் அவுட் ஆக்கி வெளியேற்றியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் பதோனி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது மார்ஸ் 30 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பதோனியும் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆனார். பின்னர் வந்த பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரி என 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்து தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் அப்துல் சமத் 2 சிக்ஸர்கள் அடித்து 11 பந்துகளில் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள்... ஃபுல் ஃபார்மில் களமிறங்கிய சிஎஸ்கே!!

ஷர்துல் தாகூர் 6 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 167 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ஷேக் ரசீத் 27 ரன்களிலும் ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சங்கரும் ஜடேஜாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே அணி ஸ்கோரை உயர்த்த தடுமாறியது. பின்னர் வந்த தூபே மற்றும் தோனி கூட்டணி சிறப்பாக ஆடி ஆணியின் ஸ்கோரை உயர்த்தி வெற்றி இலக்கை நோக்கி அழைத்து வந்தனர். தூபே 43 ரன்களும் தோனி 26 ரன்களும் குவித்தனர். 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பிளமிங் தந்த தரமான அட்வைஸ்... பூரானை தட்டித்தூக்கிய இளம் வீரர்... தோனிக்கு பாராட்டு!!