ரோஹித், கோலிக்கு குட்டு வைத்த பிசிசிஐ? ரஞ்சிப் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட உத்தரவு
இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் மும்பையில் இன்று நடந்த சீராய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ அமைப்பிற்கு புதிய செயலாளர், பொருளாளர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்தும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியைத் தேர்வு செய்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் உள்நாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தைனிக் ஜாக்ரன் தளம் செய்திவெளியிட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கடைசியாக 2015ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையிலும், கோலி 2012ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடினர். அதன்பின் இருவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவில்லை.
இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்..? ரோஹித் சர்மா வைத்த கோரிக்கை... இதுதான் பிசிசிஐயின் இறுதி முடிவா..?
உடற்தகுதியாளர் அறிக்கை அளித்தால், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒப்புதல், தலைமைத் தேர்வாளர் அகர்கர் ஒப்புதல் அளித்தபின்புதான் ஒரு வீரர் உள்நாட்டு போட்டியில் பங்கேற்காமல் இருக்கலாம். இல்லாதபட்சத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் உள்நாட்டுப் போட்டிகளி்ல் விளையாட வேண்டும் என பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தைனிக் ஜாக்ரன் தெரிவித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா இப்போது இருக்கும் ஃபார்மில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இருவரும் பங்கேற்க வைக்கலாமா என்பது குறித்தும் பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்திய அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிடும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் –கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டர்கள் மோசமாக செயல்பட்டு பிரதான காரணமாகும். இந்தத் தொடரில் ரோஹித்சர்மா 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்களும், விராட் கோலி, 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 191 ரன்களும் சேர்த்து சீனியர் வீரர் என்ற பொறுப்பில்லாமல் ஆடி தோல்விக்கு முக்கியக் காரணமாகினர்.
இருவரும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவருமே இப்போதைக்கு ஓய்வு இல்லை என அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்திய அணியின் தோல்வி குறித்து பிசிசிஐ தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டநிலையில் அது விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ