சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...
பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
உறுதியான இந்திய அணி அல்ல, மாற்றத்துக்கு உட்பட்டது. பிப்ரவரி 11ம் தேதிதான் பிசிசிஐ இறுதிப்பட்டியலை ஐசிசியிடம் வழங்குகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதே அணிதான், இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளனர். இதில் பும்ராவுக்குப் பதிலாக ஹர்சித் ராணா மட்டும் பங்கேற்கிறார் மற்றவகையில் பெரிதாக மாற்றம் இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்திய அணி 20ம் தேதி வங்கதேச அணியைச் சந்திக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுகுழு இன்று தேர்வு செய்து அறிவித்தனர்.
இதில் இந்திய அணிக்குக் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக காயம், உடற்தகுதி பிரச்சினையால் இந்திய அணியில் இடம் பெறாத வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படவில்லை.
பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் கடைசி டெஸ்டில் முதுகு தசைப் பிடிப்பால் பாதியிலேயே விலகிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் கடைசி நேரத்தில் அணியில் இடம் பெறுவது என்பது உடற்தகுதி அறிக்கையைப் பொருத்துதான் என்பது குறிப்பிடத்தக்து. இதனால் பும்ராவின் நிலை சுவற்றின் மீது நிற்கும் பூனைபோலத்தான்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராகவே இருப்பார்.
2023 உலகக் கோப்பையில் 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலிக்குஅதே இடம் மீண்டும் கிடைக்கும். ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரும், 4வது ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா, ரத்தாகுமா? காரணம் என்ன?
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் எடுக்கப்பட்டுள்ளனர். விஜய் ஹசாரே கோப்பையில் சஞ்சு சாம்ஸன் பங்கேற்காததால், அவரை தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சேர்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப்பின் மீண்டும் அணியில் விளையாட உள்ளார், அந்தத் தொடரில் 24 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார். விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டதையடுத்து, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஆனால், முகமது சிராஜ் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2023ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்
இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் தொடர் விளையாடிய பின், பிப்ரவரி 6,9,12 தேதிகளில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபில் குருப்-ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்று முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20ம் தேதி வங்கதேச அணியையும், 23ம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோதுகிறது.
இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில்(துணைக் கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா(உடற்தகுதி தேவை), முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா
இதையும் படிங்க: இந்திய அணியை ஏமாற்றியதா சிட்னி மைதானம்..? கிழித்து தொங்க விட்ட ஜாம்பவான்கள்... ரிப்போர்ட் கொடுத்த ஐசிசி..!