முதல் டி20 போட்டியில் இந்தியா கெத்து வெற்றி.. இங்கிலாந்தை துவம்சம் செய்தது!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதல் ஓவரிலேயே சால்ட் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.மூன்றாவது ஓவரில் டக்கெட் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் இணைந்து 48 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புரூக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன்னும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஜேக்கப் பெத்தேல் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓவர்டன் 2, அட்கின்சன் 2 ரன் என அடுத்தடுத்து இங்கிலாந்து விக்கெட்டை இழந்தது. கேப்டன் பட்லர் மட்டும் 68 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 17-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். ஆர்ச்சர் 12, மார்க் வுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை இந்தியா விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தியா. சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து 84 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். அவர் ரஷீத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: ‘ஸ்கை’பால் vs பேஸ்பால்: உலக சாம்பியன் இந்திய அணியை உள்ளூரில் வெல்லுமா ....
இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 ரன்கள், ஹர்திக் 3 ரன்கள் எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 2,ரஷீத் 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டி20 போட்டி சென்னையில் ஜன. 25இல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பாகிஸ்தானின் நிபந்தனைக்கு பணிந்த இந்திய அணி..!