பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா? ஐசிசி போட்டோஷீட் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்பாக நடத்தப்படும் பாரம்பரிய போட்டோஷீட் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள், கோப்பையைச் சுற்றிஅமர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டித்தொடர்களிலும் நடத்தப்படும்.
ஏற்கெனவே பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என்று பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்திய அணி மோதும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டுவிட்டன. கராச்சி நகரில் நடக்கும் புகைப்பட நிகழ்ச்சியிலும் கேப்டன் ரோஹித் சர்மாவை பிசிசிஐ அனுப்புமா அல்லது அங்கு செல்ல ரோஹித் சர்மாவுக்கும் தடைவிதித்துள்ளதா என்பது விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது.
ஆனால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி புகைப்பட நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என்று ஒரு தகவலும், பிசிசிஐ இதுகுறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ரோஹித் சர்மா செல்வதற்கு மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதியை பிசிசிஐ எதிர்பார்க்கிறதா எனவும் தெரியவில்லை.
எல்லைப் பதற்றம், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்துக்குப்பின், இந்திய அணி 2008ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் செல்லவும் இல்லை, சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. 2012ம் ஆண்டுக்குப்பின் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட்,ஒருநாள், டி20 தொடர்களும் நடக்கவில்லை.
ஆனால், 2023ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜாகா அஷ்ரப் அழைப்பின் பெயரில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இருவர் மட்டும் பாகிஸ்தான் சென்றனர். ஆனால், இந்திய அணி சார்பில் இதுவரை எந்த வீரரும் அதிகாரபூர்வமாகச் செல்லவில்லை.ஐசிசி விதிகளின்படி அனைத்து அணிகளின் கேப்டன்கள், அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் முன் புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வாரியமும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடுவதை என் மகன் நிறுத்தட்டும்.. கடும் விரக்தியில் சஞ்சு சாம்சனின் தந்தை
அதேசமயம், மேற்கிந்தியத்தீவுகள், அமெரிக்கா இணைந்து நடத்திய 2024 டி20 உலகக் கோப்பையிலும் கேப்டன்கள் மட்டும் பங்கேற்கும் புகைப்பட நிகழ்ச்சியை ஐசிசி நடத்தவில்லை, ஆனால் பயிற்சி ஆட்டத்தில் மட்டும் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதலால், புகைப்படநிகழ்ச்சி நடத்தப்படுவதும் நடத்தாமல்விடுவதும் ஐசிசியின் விருப்பம், அணிகளும் தங்களின் நேரத்துக்கு ஏற்ப பயிற்சிப் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் பேசுகையில் “ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமைதியாக இருப்பதுதான் இந்தியாவுக்கு சிறந்த பதிலாக இருக்கும். பிசிசிஐ அமைப்புக்கு எளிமையாக ஒரு மின்அஞ்சல் மட்டும் அனுப்பி தனது எதிர்ப்பை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவு செய்ய வேண்டும். இந்திய அணி தனது ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை பதிவு செய்யாமல் இருக்கட்டும், ரோஹித் சர்மா புகைப்பட நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் வராமல் போகட்டும் இதற்காக ஏன் பாகிஸ்தான் வாரியம் கவலைப்படுகிறது அமைதியாக இருங்கள் அதுவே உங்கள் பதிலாக இருக்கட்டும். இந்தியாவின் இந்த செயல், உலகக் கிரிக்கெட்டுக்கும், ஐசிசி தலைவராக இருக்கும் ஜெய்ஷாவுக்குதான் பாதிப்பாகமாறும் ” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி செல்லவில்லை. அதேபோல 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இலங்கை, இந்தியாவில் நடக்கிறது. அதில் பங்கேற்க பாகிஸ்தான் இந்தியா செல்லக்கூடாது, இந்தியாவின் பெயரையும் வீரர்கள் தங்கள் ஜெர்சியில் பதிவு செய்யக்கூடாது என்றும் பாசித்அலி தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: சொத்தையான சூப்பர் ஸ்டார்ஸ்! ரஞ்சிக் கோப்பையிலும் சொதப்பிய ரோஹித், கில் பந்த், ஜெய்ஸ்வால்