×
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை காலி செய்தது நியூசிலாந்து..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ள, நடப்பு ஐசிசி சாம்பியனான பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் விரைவில் அவுட் ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் வில் யங், டாம் லேதம் இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிடில் ஓவர்களை இந்த கூட்டணி திறம்பட விளையாடியது. வில் யங் 113 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் லேதம் சதம் கடந்தார். இறுதி கட்டத்தில் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த பிலிப்ஸ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது.

321 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாபர் அஸம், சவுத் ஷகீல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். சவுத் ஷகீல் வெறும் ஆறு ரன்களுடன் மூட்டைக் கட்டினார்.  பாபர் அஸம் 33வது ஓவர் வரை விளையாடி அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 3 ரன்கள், ஃபகர் ஸமான் 24 ரன்கள், தய்யப் தாஹிர் 1, ஷாஹின் அஃப்ரிடி 14, நஸீம் ஷா 13 என பின்னர் வந்த வீரர்கள் தடுமாறினர்.

குஷ்தில் ஷா மட்டும் 69 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவினார். இறுதியில் 47 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து  260 ரன்களுடன் ஆட்டமிழந்து, பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணி வரும் 23 அன்று துபாயில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி.. பும்ரா, ஜெய்ஸ்வால் அவுட்.. துபாய் செல்லும் இந்திய அணி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share