இந்தக் கலாச்சாரம் ஒழியனும்.. இந்திய கிரிக்கெட் உருப்பட மாஜி வீரர் அட்வைஸ்!
இந்திய அணியின் வீழ்ச்சிக்கு ஒன்றுதான் காரணம். அது, வீரர்களை நாயக பிம்ப வழிபாட்டு செய்யும் மனோபாவம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் 10 டெஸ்ட் பொட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 3 வெற்றி, 6 தோல்வி, 1 சமன் என முடித்தது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு 0-3 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-3 என்கிற கணக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இழந்தது. தவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது. இதனால், இந்திய அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியைப் பற்றி பத்தி ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய அணியின் வீழ்ச்சிக்கு ஒன்றுதான் காரணம். அது, வீரர்களை நாயக பிம்ப வழிபாட்டு செய்யும் மனோபாவம். சில இந்திய வீரர்களை வழிபடும் கலாச்சாரம் கவலையளிக்கிறது. 2011-12இலிருந்து இது நடந்து வருகிறது. கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டார் வீரர்கள் தொடக்கத்தில் என்ன செய்தார்களோ அதற்கு நேர் எதிராக இப்போது செய்து வருகிறார்கள். மோசமான ஆட்டத்தால் இந்திய அணியை கீழே இட்டுச் செல்கின்றனர்.
ஸ்டார் வீரர்கள் பற்றி அறிவுபூர்வமாக நாம் சிந்திப்பதில்லை. எளிதில் உணர்ச்சி வசப்படுகிறோம். இதனால் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் அல்லது நாயக வழிபாட்டுக் கலாச்சாரத்தால் அழுத்தப்படுகின்றனர். ஸ்டார் வீரர்கள் அல்லது மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை அவர்களே எடுக்கட்டும் என்று தேர்வாளர்கள் நினைக்கின்றனர். நாயக வழிபாட்டில் உள்ள வீரரின் கரியரை முடித்து வைத்து, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக தேர்வாளர்கள் விரும்புவதில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. யார் யாருக்கு இடம்?
ஒரு வீரரை நீக்க தயங்குகின்றனர். குறிப்பிட்ட வீரர் சரியாக ஆடவில்லை என்று சொல்லும் வாய்ப்பை கிரிக்கெட் அணி நிர்வாகம் இழந்து விடுகிறது. இதன் மூலம் வீரரின் பிராண்ட் வேல்யுவைத் தக்க வைக்கின்றனர். தேர்வாளர்களின் தாக்கம் பெரியது. தேர்வுக்குழுவினர் நினைத்தால் என்னவெல்லாமும் செய்ய முடியும். ஆனால், இந்தியாவில் எதுவும் நடப்பதில்லை. நம் ஊடகங்களும் தேவையற்ற கவன ஈர்ப்பை வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்குகின்றன. ஆஸ்திரேலிய அணி ஒரு வீரர் சுமையாக மாறும் முன்பே அவரைக் கழற்றி விடுகிறது" என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் - கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்மிக்கை ..!