இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடு! வெளிநாடுகளுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்வதில் சிக்கல்...
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு பயணித்தின்போது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்(பிசிசிஐ) விதிக்க முடிவு செய்துள்ளது...
ஆஸ்திரலேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்ததையடுத்து, இந்த கடுமையான விதிகளை வீரர்கள் பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி வெளிநாடுகளுக்கு இனிமேல் இந்திய அணி டூர் சென்று விளையாடும்போது, அந்தத் தொடர் முழுவதும் குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ள இயலாது.
45 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு இந்திய அணி பயணித்தால், அதில் 14 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை வீரர்கள் தங்களுடன் தங்கவைத்துக் கொள்ள முடியும் என்று சமீபத்தில் முடிந்த பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆஸ்திரேலியத் தொடரில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் தங்கள் மனைவி, குழந்தைகளை டூர் முடியும்வரை உடன் தங்கவைத்திருந்தனர்.ஆனால், இந்த 3 பேருமே சிறப்பாக பேட் செய்யவில்லை, ரன்களும் அடிக்கவில்லை.
பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக்கொள்ளும் நாட்களைக் குறைத்தது மட்டுமல்லாமல், அனைத்து வீரர்களும் ஒரே பேருந்தில்தான் செல்ல வேண்டும். எந்த வீரரும் தனித்தனியாக கார்களில் வருவதற்கு அனுமதியில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் ஊதிய முறையை மாற்றியமைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நல்ல ஊதியமும், சீனியர் வீரர்கள் மோசமாக பேட் செய்தாலும் அவர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கார் ரேஸில் அடிதூள்.. தல அஜித் மூன்றாமிடம் பிடித்து சாதனை.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி ஒரு வீரர் 2022-23 சீசனில் 50 சதவீத போட்டிகளில் டெஸ்ட் விளையாடி இருந்தால், அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
ஒரு சீசனில் 75 சதவீதம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது பிசிசிஐ
வீரர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பொறுப்புடன் இருக்கவும், இந்த திட்டங்களை பிசிசிஐ அறிமுகப்படுத்த இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. அதேநேரம், வீரர்களின் பேட்டிங் திறன், பந்துவீச்சு திறன், விளையாட்டு அடிப்படையில் ஊதியக் குறைப்பையும், ஊதிய உயர்வையும் முடிவு செய்யவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. பிசிசிஐ வரையரை செய்துள்ள அளவுக்கு எந்த ஒரு வீரர் விளையாடாமல் இருக்கிறாரோ அவர் ஊதியக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ