×
 

சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து வீரரை வைத்தே இங்கிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா: வரலாற்று சேஸிங் சாத்தியமானது எப்படி?

நேற்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

லாகூரில் நேற்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அடுத்துவரும் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘இந்தியா உங்களை தோற்கடிக்கும்...’ நாக்கில் விஷம் ஏற்றி பாகிஸ்தானை உசுப்பேற்றும் அக்தர்..!

86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜோஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய பேட்டர் ஜோஸ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதத்தை எட்டி, சாம்பியன்ஸ் டிராபியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் வரிசையில் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கின் சாதனையை சமன் செய்தார். 2002ல் கொழும்புவில் இங்கிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் சேவாக் சதம் அடித்திருந்தார்.

வரலாறு படைத்த ஆஸ்திரேலியா!

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்து வரலாறு படைத்திருந்தது. ஆனால், அந்த சாதனையை வெறும் 3 மணிநேரம் மட்டுமே நிலைக்க வைத்திருந்த ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தனர். இதற்கு முன் 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து சாதனை படைத்திருந்தது.

352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது என்பது, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின்அதிகபட்ச சேஸிங்காக மாறியது. இதற்கு முன் 2023 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை பாகிஸ்தான் சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை ஆஸ்திரேலியா நேற்று முறியடித்தது. அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளி்ல் ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக 350 ரன்களுக்கு மேல் ஸ்கோரை 2வது முறையாக சேஸிங் செய்துள்ளது.

வீணான பென் டக்கெட் சதம்!

இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவிப்பதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 165 ரன்கள் அடித்தது முக்கியக் காரணம். ஆனால், அவரின் அற்புதமான சதம், இங்கிலிஸ் ஆட்டத்தின் முன் வீணாகியது. சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே 145 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

ஆஸ்திரேலிய வெற்றி சாத்தியமானது எப்படி?

சாம்பியன்ஸ் டிராபில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்ட்ராக் ஆகிய 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை. ஸ்டாய்னிஷ் ஓய்வு பெற்றுவிட்டார், கேமரூன் கிரீன், மிட்ஷெல் மார்ஷ் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் பிக்பாஷ் லீக்கில் விளையாடிய வீரர்களையும், ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடிய வீரர்களையும் அணியில் சேர்த்து, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.

சர்வதேச போட்டிகளில் 20 ஆட்டங்களுக்கும் குறைவாக ஆடிய வீரர்களை வைத்து அற்புதமான வெற்றியை ஆஸ்திரேலிய பெற்றுள்ளது. இதில் ஸ்பென்ஸர் ஜான்சன், இங்கிலிஸ்,வாரிஷிஸ் ஆகியோர் 10 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியவர்கள். ஆனால், இவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடைசியாக 2007ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது அதன்பின் 18 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி பெற்றுள்ளது. 1996ம் ஆண்டு லாகூரில் கடைசியாக பேட்டர்கள் ஆதிக்கம் செய்த போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதன்பின் ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் இப்படிப்பட்ட ஆட்டத்தை ரசித்துள்ளனர்.

ஆஸ்திரலேிய அணி தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஸ்மித் விக்கெட்டை இழந்து 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனத் தடுமாறியது. ஆனால், மேத்யூ ஷார்ட், லாபுஷேன் அமைத்த 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் லேசான நம்பிக்கையை அளித்தது.

அதன்பின் அலெக்ஸ் கேரே, இங்கிலிஸ் 5-வது விக்கெட்டுக்கு அமைத்த 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி சாத்தியம் என்பதை நிரூபித்தது. இதில் சதம் அடித்த இங்லிஸ் பூர்வீகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியதால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வருகிறார். இப்போதும் அவரின் உறவினர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். 

தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம என ஆஸ்திரேலிய பேட்டர்கள் மனம் தளரவில்லை. லாபுஷேன், மேத்யூ ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். மேத்யூ ஷார்ட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

லாபுஷேன் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நெருங்கிய நிலையில் அதில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறிது நேரம் மட்டுமே களத்தில் நீடித்த ஷார்ட் 63 ரன்கள் சேர்த்திருந்தபோது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் அலெக்ஸ் கேரே, ஜோஸ் இங்கிலிஸ் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினர். மெல்லமெல்ல ஆட்டம் தங்கள் கரங்களைவிட்டு நகர்வதை இங்கிலாந்துவீரர்கள் உணரத் தொடங்கினர். கேரே, இங்கிலிஸ் ஆட்டத்தில் நேரம் செல்லச் செல்ல, ஆழமும், ஆக்ரோஷமும் காணப்பட்டது.

இங்கிலிஷ் 41 பந்துகளிலும், கேரே 49 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர். ஆஸ்திரேலிய அணியும் வெற்றியை மெல்ல நெருங்கியது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 50 பந்துகளில் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. 42-வது ஓவரில் அலெக்ஸ் கேரே 69 ரன்களில் கார்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் இங்கிலாந்து வீரர்கள் நிம்மதி அடைந்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். 

ஆனால், மேக்ஸ்வெல் களத்துக்கு வந்து, இங்கிலிஷுடன் சேர்ந்தார். இதன்பின் இருவரின் ஆட்டமும் இன்னும் வேகமெடுத்தது, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலிஸ் 77 பந்துகளில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 41 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இங்கிலிஸ், 46 பந்துகளில் சதத்தை எட்டினார். மேக்ஸ்வெல் தனக்கே உரிய ஸ்டைலில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர், 8பவுண்டரி)அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியப் பந்துவீச்சிலும் பெரிதாக எந்த நெருக்கடியும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கவில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், வாரிஷ், மேக்ஸவெல், ஜம்பா என அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய அணியில் வலுவான பேட்டிங் இருந்ததால் தோல்வியிலிருந்து தப்பித்தது. 

இங்கிலாந்து தோல்விக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து அணி 351 ரன்கள் சேர்த்து அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 26.3 ஓவர்கள் வீசி 226 ரன்களை வாரி வழங்கினர். 8.52 எக்னாமி ரேட் வைத்திருந்தனர். அதாவது ஓவருக்கு 8.50 ரன்களை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.

ஆர்ச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இங்கிலாந்து அணி அதை நேற்றோடு மறந்திருக்கலாம். ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொட்டிக் கொடுத்தார், மார்க்உட் நானும் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் 75 ரன்களும், கார்ஸ் 7 ஓவர்கள் வீசி 69 ரன்களை வாரிக்கொடுத்தனர். அதில் ரஷித் ஒருவர் மட்டுமே 4.7 ரன்ரேட்டில் பந்துவீசி சிக்கனமாக முடித்தார். லிவிங்ஸ்டன், ஜோ ரூட் இருவருமே 6 ரன்களுக்கு மேல் வழங்கினர். 

இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூற முடியும். அது மட்டுமல்லாமல் ஜோஸ் இங்கிலிஸ் அடித்த கேட்சை ஆர்ச்சர் கையில் விழுந்த பந்தை பிடிக்காமல் கோட்டைவிட்டபோதே ஆட்டம் அவர்களை விட்டு நகர்ந்துவிட்டது. அந்த கேட்சை மட்டும் ஆர்ச்சர் பிடித்திருந்தால், இங்கிலிஸ் விக்கெட் வீழ்ந்திருக்கும் ஆட்டத்தை இங்கிலாந்து வீரர்கள் கையில் எடுத்திருப்பார்கள். ஆனால், ஆர்ச்சர் கேட்சை கோட்டைவிட்டது ஆட்டத்தையே இங்கிலாந்து கோட்டைவிட்டது.

இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் முக்கியக் காரணம். ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவைத்து எடுத்து பென் டக்கெட் 165 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும். இவருக்கு துணையாக ஜோ ரூட் இருந்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் இங்கிலாந்து அணிக்கு  உயிரூட்டியது. மற்ற வீரர்கள் அனைவரும் 25 ரன்களுக்குள்  ஆட்டமிழந்தனர். 

இதையும் படிங்க: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம்... பாதியிலேயே நிறுத்தம் ஏன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share