ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி தூக்கியது ரோஹித் படை.. எம்.எஸ். தோனிக்கு பிறகு ரோஹித் சாதனை.!
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. எம்.எஸ். தோனிக்குப் பிறகு இக்கோப்பையை வென்று சாதித்துள்ளார் ரோஹித் சர்மா.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி துபாயில் இந்தியா நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா , துணை கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து இந்தியாவுக்கு தொடக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை இந்திய அணி எடுத்தது. இத்தொடரில் சொதப்பி வந்த ரோஹித் அதிரடியாக ஆடி அசத்தினார். நிதானமாக இன்னிங்ஸை அணுகினார் கில். 18 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் வீசிய 19-வது ஓவரில் கவர் திசையில் ஷாட் ஆட முயன்று கில் அவுட் ஆனார். கில், 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். பிரேஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கோலி ஒரே ரன்னில் அவுட் ஆனதால், இந்திய ரசிகர்கள் அப்செட் ஆயினர்.
அதன் பின்பர் ரச்சின் ரவீந்திரா வீசிய 27-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் ரோஹித். நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் லேதம் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். ரோஹித் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடியது. இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சான்ட்னர் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் வீழ்ந்தார். ஸ்ரேயாஸ் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 29 ரன்களில் வெளியேறினார்.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி .. முதல் பகுதி நிறைவு..
கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேமிசன் பந்தில் வீசிய ஹர்திக் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜா களத்துக்கு வந்தார். அப்போது 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.
49-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ராகுல் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
கடைசியாக 2013இல் எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணி கோப்பையை வென்றது. அவருக்குப் பிறகு ரோஹித் சர்மா இக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்