தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் இந்திய வீரர்.. வியக்க வைக்கும் உணவுக் கட்டுப்பாடு.!
உடல் எடையைச் சீராகப் பராமரிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மேற்கொள்ளும் டயட் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
2023 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக விளையாடாமல் இருந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் ஷமி இடம் பெற்றுள்ளார். முதல் லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் முகமது ஷமி படைத்தார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது உடல் எடையைக் குறைத்தது பற்றி ஷமி பேசியுள்ளார். “2015க்குப் பிறகு நான் ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிடுகிறேன். காலையும் மதியமும் சாப்பிட மாட்டேன். இரவு மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு கடினமாகத்தான் இருந்தது. ஆனால், பழகிய பிறகு எளிமையாகிவிட்டது.
இதையும் படிங்க: வங்கதேச வீரர்களை பங்கம் செய்த முகமது ஷமி… உலக சாதனையில் தொடங்கிய அபார ஆட்டம்..!
தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது எனது உடல் எடை 90 கிலோவை நெருங்கியது. காயத்திலிருந்து மீண்டு வரும்போது 9 கிலோவைக் குறைத்தேன். நான் சுவையான உணவுகளை எப்போதும் சாப்பிட விரும்பமாட்டேன். இனிப்புகளைத் தொடவே மாட்டேன். எதையெல்லாம் சாப்பிடக்கூடாதோ அதிலிருந்து தள்ளியே இருக்கிறேன். எப்போதாவதுதான் பிரியாணி சாப்பிடுவேன்” என்று ஷமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாத முகமது ஷமி... காரணம் தெரியுமா..?