சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதல்
ஐசிசி நடத்தும் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது. நாளை பிற்பகல் பகலிரவாகத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கடைசியாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை, இந்தியாவோடு இணைந்து, பாகிஸ்தான் நடத்தியது. அதன்பின் ஐசிசி சார்பில் எந்தப் போட்டியையும் பாகிஸ்தான் நடத்தவில்லை. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின் இப்போது மீண்டும் ஐசிசி சார்பில் போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
2009ம் ஆண்டு இலங்கை அணி லாகூரில் விளையாடியபோது, அங்கு திடீரென தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விளையாட பல அணிகளும் மறுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் சென்று இலங்கை அணி விளையாடியது. அப்போதிருந்து பாகிஸ்தானில் மெல்ல மெல்ல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டன. பாகிஸ்தானில் சூழல் படிப்படியாக மாறி, தற்போது ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் அளவுக்கு மாறிவிட்டது.
சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன: சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், பின்னர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் என மாற்றப்பட்டது. 2017ம் ஆண்டுக்குப்பின் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படவில்லை. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: மகுடம் சூடும் அணிக்கு பரிசுத் தொகையை வெளியிட்ட ஐசிசி
2021ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் என ஐசிசி அறிவித்தது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தானாகவே தகுதி பெற்றுவிடும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 8 அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் உள்ளன. இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவில்லை.
புறக்கணிப்பு கோஷம்: ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் அரசாங்கம் பெண்களை கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்தது. இதை எதிர்த்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் கட்சிகள் முழக்கமிட்டன, கோரிக்கை விடுத்தன.
பிரிட்டனில் 150க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கையொப்பமிட்டு இங்கிலாந்து அணியை சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்காமல் புறக்கணிக்கக் கோரினர். ஆனாலும், அதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே அரசியல், புவி அரசியல் சார்ந்த பிரச்சினைகள், எல்லைப் பிரச்சினைகள் இருந்ததால் பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது.
இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன.
2008ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடவில்லை, இரு அணிகளும் தத்தம் நாடுகளில் தொடர்களையும் நடத்தவில்லை. 2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது, ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. 2023ம் ஆண்டு ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் நடத்தியபோதிலும் இந்திய அணி அங்கு செல்லாமல் இலங்கை சென்று விளையாடியது.
துபாயில் இந்திய அணி போட்டிகள்: பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்துவிட்டதால் துபாயில் விளையாடுகிறது. இந்திய அணி சார்பில் லீக் ஆட்டங்கள் துபாயிலும், அரையிறுதியும், இந்தியா மோதும் இறுதிப்போட்டியாக இருந்தால் துபாயிலும் நடத்தப்படுகிறது.
நட்சத்திர வீரர்கள் இல்லாத தொடர்: ஒவ்வொரு அணியிலும் முக்கிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவும் அவர்கள் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க் ஆகிய 3 நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இல்லை. அதிர்ச்சிதரும் வகையில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் காயத்தால் பங்கேற்கவில்லை. இதனால் பெரும்பாலும் புதிய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அதேபோல இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஏஎம் காஜன்பார், நியூசிலாந்து அணியில் பென் சீர்ஸ், லாக்கி பெர்குஷன் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
அரங்குகள் புதுப்பிப்பு: கடந்த 1996ம் ஆண்டுக்குக்பின் பாகிஸ்தானில் ஐசிசி தரப்பில் போட்டிகள் நடத்தப்படுவதால் மைதானங்கள், பிட்ச், அரங்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சிதமடைந்திருந்த லாகூர் கடாபி அரங்கு 117 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கராச்சி, ராவல் பிண்டி அரங்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பரிசுத் தொகை எவ்வளவு: கடந்த முறை நடந்த சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையைவிட 53 சதவீதம் உயர்த்தி ஒட்டுமொத்தமாக ரூ.60 கோடியை ஐசிசி ஒதுக்கியுள்ளது. ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, 20லட்சத்து 24ஆயிரம் டாலர்கள் அதாவது ஏறக்குறைய ரூ.20 கோடி பரிசுத் தொகையை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு அதில் பாதித் தொகை 10 லட்சத்து 12 ஆயிரம் டாலர்கள் அதாவது ரூ.9.12 கோடியை பரிசுத் தொகையாகப் பெறும். அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு ரூ.4.86 கோடியும் கிடைக்கும். குரூப் பிரிவோடு வெளியேறும் அணிக்கு ரூ.30 லட்சம் அதாவது 34 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். 5வது அல்லது 6வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.3 கோடியும் 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.2 கோடியும் கிடைக்கும். இது தவிர சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் பங்கேற்பு உறுதித்தொகையாக தலா ரூ.1.08 கோடி கிடைக்கும்.
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதல்: கராச்சியில் நாளை பிற்பகலில் பகலிரவாக தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. உள்நாட்டில் பாகிஸ்தானை வெல்வது கடினம், வெற்றியுடன் தொடரைத் தொடங்க வேண்டும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் பாகிஸ்தான் இருக்கும். கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையில் இருக்கும் பாகிஸ்தான் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறது.அதிலும் உள்நாட்டு மைதானம் அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பாபர் ஆஸம், ஷாகின் அப்ரிதி என பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும், அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணி கேப்டன் மிட்ஷெல் சான்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. டிரன்ட் போல், சவுத்தி, பெர்குஷன், சீர்ஸ் ஆகியோர் காயத்தால் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அது மட்டுமல்லாமல் முத்தரப்பு தொடரில் கேட்ச் பிடிக்கும்போது பந்துபட்டு ரச்சின் ரவீந்திரா காயத்தில் உள்ளார். இவர்கள் இல்லாத நிலையில் பந்துவீச்சில் பலவீனமான அணியாகவே நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. அதேசமயம், பேட்டிங்கில் வில்லிம்யன், டேரல் மிட்ஷெல், கான்வே,வில் யங், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ் என வலுவான வீரர்கள் இருப்பது பாகி்ஸ்தானுக்கு சவாலாக அமையும். சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வலுவாக இருப்பதால், பாகிஸ்தான் எச்சரிக்கையுடனே அணுக வேண்டியதிருக்கும்.
இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து இரு அணிகளும் 118 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து 53 போட்டிகளிலும் வென்றுள்ளது.
கராச்சி ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டரை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் அடித்து ஆடலாம். இங்கு சராசரியாக ஒரு அணி 230 முதல் 250வரை அடிக்க முடியும் அதை எளிதாகவும் சேஸிங் செய்யலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் அடிப்பது பாதுகாப்பானது.
அணிகள் விவரம்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆஸம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயாப் தகிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் காந், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப், முகமது ஹஸ்னன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி
நியூசிலாந்து: மிட்ஷெல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரல் மிட்ஷெல், வில் ரூர்கோ, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், வில் யங், ஜேக்கப் டபி
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு முன்பே பேரிடி… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு..!