×
 

மீண்டும் தோல்வியை தழுவிய சி.எஸ்.கே… அபாரமாக பீல்டிங் செய்த பஞ்சாப் அணி!!

சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல்  சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரியான்ஸ் ஆர்யா முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்சர் என பந்துகளை பறக்க விட்டார். மறுமுனையில் இருந்த பிராப்சிம்ரன் சிங் 2வது ஓவரில் டக் அவுட் ஆனார்.

இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒன்பது ரன்கள் எடுத்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதை தொடர்ந்து அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் ஒரே ஓவரில் நெஹல் வதரா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் பஞ்சாப் அணி தடுமாறியது. இருந்தபோதிலும் பிரியான்ஸ் ஆர்யா அபாரமாக ஆடி அணிக்கு ரன்களை குவித்தார். 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் அடித்து 39 பந்துகளில் சதம் அடித்தார். இதனால் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க: KKR தோல்விக்கு இதுதான் காரணம்... அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே விளக்கம்!!

பின்னர் ஷாசாங் சிங் 36 பந்துகளில் 52 ரன்களும், மார்கோ யான்சன் 19 பந்துகளில் 34 ரன்களும் அடித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி அபராமாக ஆடியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கன்வே அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தார். பின்னர் வந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதை அடுத்து வந்த சிவம்தூபே பஞ்சாப் அணியின் பந்துகளை பறக்கவிட்டார். இருந்தபோதிலும் அவர் 42 ரன்களில் போல்ட் ஆனார். இதை அடுத்து களமிறங்கிய தோனி, அணியை வெற்றி பெற செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 1 பவுண்ட்ரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதை அடுத்து ஷங்கர் களமிறங்கினார். மறுபுறம் கான்வே ரிட்டையர்டு அவுட் ஆனதை அடுத்து ஜடேஜா களமிறங்கினார். இருவரும் சேர்ந்து ஆடியும் இலக்கை எட்டாததால் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.     

இதையும் படிங்க: ஐபிஎல்-லில் அதிவேக 2000 ரன்கள்... சாதனை படைத்த LSG வீரர்... யார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share