ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வா? - மனம் திறந்த ரோகித் சர்மா!
ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ரோகித் சர்மா நேரடி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடருக்கு கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார். இதனிடையே ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் பும்ரா தலைமையில் விளையாடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் ரோகித் சர்மா மோசமான பார்மில் இருப்பதாகவும், அவர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்று சிட்னியில் 5வது மற்றும் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரோகித் சர்மா தாமாகவே போட்டியில் இருந்து விலகியதாக தெரிகிறது. தனக்கு ஓய்வளிக்கும் படி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் ரோகித் சர்மாவே கேட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, பார்டர் – கவாஸ்கர் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: எப்படி இருந்த இந்திய அணி இப்படி ஆயிடுச்சே..! நல்லா இருந்த ரோஹித்தும்... நாறடித்த கம்பீரும்..!
தற்போது அதனை மறுத்துள்ள ரோகித் சர்மா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் அறிவிக்கவில்லை என்றும், தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் போது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளருடன் சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்ததாகவும், இப்போது ஃபார்மில் இல்லாததால் ஓய்வு எடுக்க வேண்டும் என நினைத்ததை அவர்கள் ஆதரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில், “நான் ஒன்றைச் சொன்னால் அதற்கு 50 விளக்கங்கள் இருக்கும். எனது பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. உண்மையைச் சொன்னால் நான் பார்மில் இல்லை. 5வது போட்டி என்பது மிகவும் முக்கியமானது. எனவே எனது முடிவை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்களுடன் நடந்த உரையாடல் மிகவும் எளிதானது. நான் எங்கும் செல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட ரோகித் சர்மா 10 ரன்களைக்கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம்- இந்திய அணி நிர்வாகம் எடுத்த அதிரடி..! அட, பும்ராவுக்குமா..?