‘சுப்மான் கில் என்ன செய்தார்?’ ‘தமிழராக இருந்தால் எப்போதோ இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்’: பத்ரிநாத் ஆவேசம்
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சுப்மான் கில் என்ன பங்களிப்பு செய்தார். இப்படியெல்லாம் விளையாடிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எப்போதோ அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுப்மான் கில் மிகுந்த ஏமாற்றத்தை தொடர்முழுவதும் அளித்தார். சுப்மான் கில்லிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 இன்னிங்ஸ்களில் சேர்த்து மொத்தம் 93 ரன்கள் மட்டுமே கில் சேர்த்திருந்தார். முதல் டெஸ்டில் காயம் காரணமாக ஆடாத சுப்மான் கில், மெல்போர்ன் டெஸ்டில் கில்லைத் தேர்ந்தெடுக்கவில்லை. மீதமுள்ள டெஸ்டில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்புக் கிடைக்கும் அனைத்தையும் வீணடித்தார்.
சுப்மான் கில்லின் மோசமான பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு சுப்ரமணியன் பத்ரிநாத் அளித்த பேட்டியில் கூறுகையில் “ சுப்மான் கில் டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டார், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தீர்க்கம், மனநிலையோடு அவர் களத்தில் இல்லை. சுப்மான் கில் நடுவரிசையில் களமிறக்கி ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்குவார் என்று இருந்தேன். ஆனால், ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கூட அமைக்க முடியவில்லை. லாபுஷேன், மெக்ஸ்வீனி அமைத்த பார்ட்னர்ஷிப்கூட அவரால் அமைக்க முடியவில்லை. இதை பார்க்கவே எனக்கு கடினமாக இருந்தது. நம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கில் பேட்செய்யவில்லை.
கிரிக்கெட்டில் ரன் அடியுங்கள், அடிக்காமல் போங்கள், ஆனால் களத்தில் இறங்கியதிலிருந்து ஒருவிதமான உத்வேகம், உற்சாகம், அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் ஆவேசத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துவீச்சாளர்களை சோர்வடைச் செய்வது போல் பேட் செய்ய வேண்டும்.
பந்து தேயும்வரை களத்தில் நிலைத்து நின்று விளையாடுங்கள் என்று தெரிவித்தேன். ஸ்கோர் உயராவிட்டாலும் கூட நிலைத்து களத்தில் நின்று மற்ற வீரர்களுக்கு உதவ வேண்டும். 100 பந்துகளை எதிர்த்து விளையாடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தால், பந்துவீச்சாளர்கள் நிச்சயம் சோர்வடைந்துவிடுவார்கள். இதுதான் உன்னுடைய பங்களிப்பாக அணிக்கு இருக்க முடியும்.
இதையும் படிங்க: ரோஹித், கோலியை இந்திய டெஸ்ட் அணியிலிருந்தே தூக்குங்கள்: அகர்கருக்கு ‘டோஸ்விட்ட’ பிசிசிஐ...
மெக்ஸ்வீனி, லாபுஷேன் இருவரும் அடிலெய்ட் டெஸ்டில் இதைத்தான் செய்தார்கள். ஏராளமான டாட் பந்துகளைச் சந்தித்தார்கள், பும்ராவும் அதிகமாகப் பந்துவீசித்தான் காயமடைந்தார்.
இதுபோன்று மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தமிழகத்தில் இருந்து சுப்மான் கில் இந்திய அணிக்கு வந்திருந்தால், அவர் எப்போதோ அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருப்பார்.
சுப்மான் கில் ஒவ்வொரு டெஸ்டிலும் ஆட்டமிழந்த முறையைப் பாருங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது அடிலெய்ட் டெஸ்ட், சிட்னி டெஸ்டிலும் கில் ஒரே மாதிரியாக, களத்தில் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார்.
பேட் செய்ய மனம் இல்லாமல், உத்வேகம் இல்லாமல் இருப்பவர் பேட் செய்யக்கூடாது. ஆனால் அவர் இதுதான் என் பேட்டிங், நான் நிலைத்து ஆடுவேன், ரன்களை சேர்ப்பேன் என்று பேட் செய்யதிருக்க வேண்டும். அப்போதுதான் 4 பேர் எழுதுவார்கள், அந்த நேரத்தில் உன்னால் என்ன முடியுமோ அதை செய்து முயற்சித்திருக்கலாம்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மான் கில்லிடம் இருந்து எந்தப் பங்களிப்பும் வரவில்லை. களத்திலும் பீல்டிங் மோசம், ஸ்லிப்பிலும் நிலையாக நிற்கவில்லை, பாயின்ட் திசையிலும் நிற்கவில்லை. இந்திய அணிக்காக கில் என்ன பங்களிப்பு செய்தார்” என கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?