2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். பிலிப் சால்ட் 17 பந்துகளில் 4 பவுண்ட்ரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 37 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இதை அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி 22 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்கள், ஜிதேஷ் சர்மா 3 ரன்கள், கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்கள், க்ருனால் பாண்டியா 18 ரன்கள் எடுத்து வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக டிம் டேவிட் களமிறங்கி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். பின்னர் 19வது ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்ட்ரி அடித்து 37 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி அணி... ரன்களை குவிக்க தடுமாறிய வீரர்கள்!!

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மற்றும் டூப்ளசிஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால் டூப்ளசிஸ் 2 ரன்களிலும் ஜேக் பிரேசர் மெக்கர்க் 7 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய அபிஷேக் போரெலும் 7 ரன்னில் ஆட்டமிந்தார். அப்போது வந்த கே.எல்.ராகுல் நிதனமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அக்சார் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒருபுறம் 23 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். மறுபுறம் கே.எல்.ராகுல் பெங்களூர் அணியின் பந்துகளை தெறிக்கவிட்டார். 53 பந்துகளில் 7 பவுண்ட்ரிகள் 6 சிக்ஸர்கள் அடித்து 93 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.. அது அன்பின் வெளிப்பாடு.. சமாளிக்கும் அஸ்வின்.!!