சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக உள் நாட்டில் விளையாடி வரும் இந்தியா, இத்தொடர் முடிந்த பிறகு துபாய்க்கு பயணமாகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விளையாடத நிலையில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடிய நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் வீரர்களின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். “ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்திய அணிக்கு நல்ல விஷயம் இது. நான் கே.எல். ராகுலை பற்றிதான் கவலைப்படுகிறேன். அக்சர் பட்டேல் 30, 40 ரன்கள் அடித்து அணிக்கு பங்களிக்கிறார். அது நல்ல விஷயம்தான். ஆனால் கே.எல். ராகுலுக்கு நடப்பதுதான் நியாயம் இல்லை. அவரது ரெக்கார்டை வேண்டுமானால் எடுத்துப் பாருங்கள். ஐந்தாம் வரிசையில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்வது சரியில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகிறது. அக்சர் பட்டேலை ஐந்தாம் வரிசையில் ஏன் இறக்குகிறீர்கள்? இது ஒரு நிலையான வியூகமாக இருக்க முடியாது. இப்படி மாற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். முக்கியமான போட்டியில் எல்லாமே சொதப்பிவிடும்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியில் இவர்களை அணியில் விளையாட வையுங்கள்..? ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான, சிறப்பான ஐடியா!
அக்சர் பட்டேல் ஐந்தாம் வரிசையில் ஆடுவதில் பிரச்சனை இல்லை. அவர் தனது வாய்ப்பை பயன்படுத்தவும் செய்கிறார். ஆனால், ராகுலை பேட்டிங் வரிசையில் கீழே இறக்கி ஆட வைப்பதற்கு பதிலாக ரிஷப் பண்டை ஆறாம் வரிசையில் ஆட வைக்கலாம். ஏனென்றால் நீங்கள் ராகுலின் தன்னம்பிக்கையை உடைக்கக் கூடாது. உலக கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கும் ஒரு வீரருக்கு இதுபோல செய்வது சரியல்ல" என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...