ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இத்தொடரின் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், “இத்தொடரில் நாங்கள் ஐந்து முறையும் டாஸ்களில் தோற்றோம். ஆனால், ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். எந்த ஒரு தொடரிலும் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டி வரை செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், நாங்கள் அதைச் சாதித்தோம்.

சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகுதான் அதன் தனித்துவத்தை நாங்கள் உணர்ந்தோம். இதை வார்த்தைகளில் எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. நாங்கள் முழு உறுதியுடனும் ஒருங்கிணைந்த அணியாகவும் விளையாடினோம். எனவே பட்டத்தை வென்றுள்ளோம். ஒவ்வொரு வீரரும் அணியில் தங்களுக்கான பங்கையும் பொறுப்புகளையும் தெளிவாகப் புரிந்து செயல்பட்டனர். அணியின் முக்கிய நோக்கம் வெற்றியைத் தேடுவதுதான், அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணியில் பும்ரா இல்லை என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அவரது காயம் முழுமையாக குணம் அடையவில்லை. அவர் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டிய வேகப்பந்து வீச்சாளர். பும்ரா இல்லாத குறையை எப்படி சமாளிப்பது என்று திட்டமிடும்போது, முகமது ஷமி இருந்தது பெரிய பலம். ஐசிசி போட்டிகளில் அவர் எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடிய இரண்டு போட்டிகள் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. மேலும், அர்ஷ்தீப், ஹர்ஷித் போன்ற பந்துவீச்சாளர்கள் மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்.

போட்டிக்கு முன்பாக கிடைத்த 20-25 நாட்களைப் பயிற்சிக்கும், ஆடுகளத்தை ஆராய்வதற்கும் பயன்படுத்தினோம். இதுவும் பும்ரா இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக செயல்பட உதவியது.
ஓய்வு குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2027 உலகக்கோப்பையில் விளையாடுவேனா என்பதை இப்போதே சொல்ல விரும்பவில்லை. தற்போது என்னுடைய கவனம் எனது ஆட்டத்திலும், அணியுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதிலும் மட்டுமே உள்ளது. அணியில் என் சக வீரர்கள் என்னை விரும்புகிறார்களா என்பதே எனக்கு முக்கியம்” என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்றைய பாகிஸ்தான் டீமால் இந்திய பி டீமைகூட வீழ்த்த முடியாது.. கவாஸ்கர் கருத்தால் கொந்தளிக்கும் இன்சமாம்.!