2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ரியான் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ரியான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.

அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது. அதில் அபாரமாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதித்து போட்டிக்கான மேட்ச் ரெஃப்ரி அறிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அம்பயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ரியான் பராக் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார். அதனால் ஓவர்களை வீசி முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது உள்ள ஐபிஎல் விதிப்படி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கேப்டன்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.. 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

முதல் முறை இந்த தவறை செய்ததால் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது. சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன் 41 ரன்கள், ரியான் பராக் 26 ரன்கள், ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒருமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட் விதியை மீறி இருப்பதால், தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அணியில் இடம்பெற்ற பிளேயிங் லெவனில் இருந்த வீரர்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் அல்லது 25 சதவீத போட்டி சம்பளம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோசமாக ஆடிய CSK & MI... கடுமையாக விமர்சித்த பாக். வேகப்பந்து வீச்சாளர்!!