×
 

சிஎஸ்கே அணியா இது.? ஹாட்ரிக் தோல்வி.. சேசிங்கில் சொதப்பல்.. தவிடுபொடியாகும் பழைய சாதனைகள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியைப் பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி பேட் செய்தது. ஜேக் பிரேசர் டக் அவுட் ஆனார். அபிஷேக் போரெல் 33 ரன்கள், கேப்டன் அக்சர் பட்டேல் 21 ரன்கள், சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால், டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.



184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்.  கான்வே 13 ரன்கள்,  கேப்டன் ருதுராஜ் 5 ரன்கள்,  சிவம் துபே 18 ரன்கள், ஜடேஜா 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். விஜய் சங்கரும் தோனியும் அணியை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் தோனி 30 ரன்களும்,விஜய் சங்கர் 69 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மூன்று தோல்வி என இரண்டு புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.



சென்னை அணி முதல் போட்டியில் மும்பை அணியைத் தோற்கடித்தது. பின்னர்  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. இப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் ஹாட்ரிக் தோல்வியைப் பெற்றுள்ளது. பெங்களூரு அணி 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை அணியைத் தோல்வியடைந்தது போல, டெல்லி அணியிடம் 15 ஆண்டுகள் கழித்து சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணியின் பழைய சாதனைகள் இந்த சீசனில் முறியடிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: #IPL2025: AGAIN LOSS...! டெல்லியிடம் படுதோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்..!



மூன்று போட்டிகளிலும் சென்னை அணி இரண்டாவதுதான் பேட்டிங் செய்துள்ளது. முதல் போட்டியில் 155 ரன் இலக்கை 20ஆவது ஓவரில்தான் எட்டியது. எஞ்சிய போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் சேசிங்கில் சென்னை அணி பலவீனமாக இருப்பது வெளிப்பட்டுள்ளது. ஓர் அணி பிளே ஆப் சுற்றில் குறைந்தபட்சம் 8 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும். சென்னை அணிக்கு இன்னும் 10 போட்டிகள் எஞ்சியுள்ளன. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானது. இதே நிலை நீடித்தால் 2022இல் சென்னை அணி அடைந்த தோல்வியை இந்த சீசனிலும் தழுவினாலும் ஆச்சரியமில்லை.



இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மீண்டும் சிஎஸ்கே அணி கேப்டனாகும் தோனி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share